Skip to main content

விதிகளை மீறியதற்கு விலை கொடுக்க தொடங்கிய மேற்கு வங்கம்!

Published on 23/10/2021 | Edited on 23/10/2021

 

west bengal

 

மேற்கு வங்கத்தில் தொடர்ந்து குறைந்துவந்த தினசரி கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஒருவாரம் கொண்டாடப்பட்ட துர்கா பூஜைக்கு முன்னர் அம்மாநிலத்தில் கிட்டத்தட்ட 450 ஆக இருந்த தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை, தற்போது 800ஐ தாண்டி பதிவாகிவருகிறது.

 

அதேபோல் கொல்கத்தாவில் முந்தைய வார வெள்ளிக்கிழமையில் 127 பேருக்கு மட்டுமே கரோனா உறுதியாகியிருந்த நிலையில், நேற்று (22.10.2021) 242 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இந்த 242 பேரில் 150 பேர் இரண்டு டோஸ் கரோனா தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேற்கு வங்கத்தில் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரிக்க, துர்கா பூஜை கொண்டாட்டங்களில் மக்கள் விதிகளை மீறியதே காரணம் என அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், துர்கா பூஜை கொண்டாட்டங்கள் தற்போதே முடிந்துள்ளதால், எந்தளவிற்கு கரோனா பரவல் அதிகரித்துள்ளது என்ற உண்மையான நிலவரம் அடுத்த வாரமே தெரியும் என்றும் கூறியுள்ளனர்.

 

இதற்கிடையே, கரோனா பரவல் காரணமாக கொல்கத்தாவில் அனைத்து சுகாதாரத்துறை ஊழியர்களின் விடுமுறையும் இரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கொல்கத்தா மாநகராட்சி அதிகாரி அதின் கோஷ், "துர்கா பூஜையைக் கொண்டாட ஏராளமான மக்கள் தெருக்களில் இறங்கியதைக் கண்டதும், அனைத்து சுகாதாரத்துறை ஊழியர்களின் விடுப்பு இரத்து செய்யப்பட்டது. தங்களுக்கு ஏற்பட்டுள்ள தொற்றின் அறிகுறி குறித்து மக்களுக்குத் தெரிவதற்கான காலம் இன்னும் முடியவில்லை என்பதால் நாங்கள் நிலைமையைக் கவனித்துவருகிறோம்" என தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்