Skip to main content

வேறு கட்சிக்கு ஓட்டு போட்டதால் தாயை அடித்துக் கொன்ற மகன்!

Published on 16/05/2024 | Edited on 16/05/2024
Son beat his mother to passed away for voting  the YSR Congress party!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும் பல்வேறு மாநிலங்களில் நடந்து முடிந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, அடுத்த கட்டத் தேர்தலான நான்காம் கட்ட வாக்குப்பதிவு, நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசம் உட்பட மொத்தம் 96 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 13.05.2024 நடைபெற்று முடிந்தது. இதனைத் தொடர்ந்து, மே 20ஆம் தேதி நடைபெறும் ஐந்தாம் கட்டத் தேர்தலை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் கடந்த 13 ஆம் தேதி ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலும் அம்மாநில சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியுக்கும், எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சிக்கும் தீவிர போட்டி நிலவுகிறது. அனந்தபுரம் மாவட்டம் கம்பதூர் பகுதியை சேர்ந்தவர் சுங்கம்மா. இவரது மகன் வெங்கடேசலு. ஆந்திராவில் நடைபெற்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க கூடாது என்றும், அதற்கு பதிலாக தெலுங்கு தேசம் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று தாயார் சுங்கம்மாவிடம் வெங்கடேசலு கூறியுள்ளார்.

ஆனால் அதனை பெரிதாக கண்டுகொள்ளாமல் வாக்குப்பதிவு நாளன்று ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த வாகனத்தில் ஏறிச்சென்று சுங்கம்மா வாக்குசெலுத்தி வந்திருக்கிறார். இதனால் கடும் கோபமடைந்த வெங்கடேசலு தனது தாயாரிடம் யாருக்கு வாக்கு செலுத்தினாய் என்று கேட்டு தகராறு செய்துள்ளார். பின்னர் சுங்கம்மா ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்குத்தான் வாக்களித்தேன் என்று கூற ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற வெங்கடேசலு வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து தாயாரின் மண்டையில் அடித்து கொலை செய்துள்ளார். ரத்தவெள்ளத்தில் சுங்கம்மா சரிந்துள்ளார். பின் அங்கிருந்து வெங்கடேசலு தப்பித்து ஓடியுள்ளார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சுங்கம்மாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார்  தலைமறைவாக உள்ள வெங்கடேசலுவை தேடி வருகின்றனர். வேறு கட்சிக்கு வாக்கு செலுத்தியதால் பெற்ற தாய் என்று கூட பார்க்காமல் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்