காவல்துறை ஆட்சேர்ப்பு முகாமில் கலந்துகொண்ட இளைஞர்களின் மார்புகளில், சாதிப்பிரிவுகளை குறியிட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
மத்தியப்பிரதேசம் மாநிலம் தார் பகுதியில் நேற்று காவல்துறைக்கான ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கலந்துகொள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டனர். மேலும், இந்த முகாமில் மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டது. அப்போது, மருத்துவ பரிசோதனையில் கலந்துகொண்ட இளைஞர்களின் மார்பில், அவரவர் சார்ந்த சமுதாயங்களின் பிரிவுகளைக் குறிப்பிடுமாறு வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதுதொடர்பான புகைப்படங்களில் இளைஞர்கள் தங்கள் மார்புகளில் எஸ்.இ., எஸ்.டி., ஓ.பி.சி. என குறிப்பிட்டிருந்தனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில், மிகப்பெரிய சர்ச்சை கிளம்பியுள்ளது.
இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விரேந்திர குமார், ‘இளைஞர்கள் தங்கள் மார்பில் சாதிப்பிரிவை எழுதவேண்டும் என எந்தவிதமான உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. தவறு எங்கு நடந்தது என்பது பற்றிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்டவர் யார் என்று தெரிந்ததும் முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என தெரிவித்துள்ளார்.