Skip to main content

பிரதமர் பயணித்த சாலை மறிக்கப்பட்ட விவகாரம் - உயர்மட்ட குழுவை அமைக்க உச்சநீதிமன்றம் முடிவு!   

Published on 10/01/2022 | Edited on 10/01/2022

 

sc

 

பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் பஞ்சாபில் சாலை வழியாக பயணம் செய்தபோது, போராட்டக்காரர்கள் சாலை மறியல் செய்தனர். இதனையடுத்து பிரதமர் மோடி, தான் பங்கேற்க இருந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பினார். பிரதமர் சென்ற கார் மறிக்கப்பட்டது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

 

இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க பஞ்சாப் அரசும், மத்திய உள்துறை அமைச்சகமும் தனித்தனியே குழு அமைத்துள்ளது. இதற்கிடையே நேற்று மூத்த வழக்கறிஞரான மணீந்தர் சிங், பிரதமர் பயணம் செய்த பாதை மறிக்கப்பட்ட விவகாரத்தை விசாரிக்க வேண்டுமென உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை கடந்த வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதிகள், பிரதமரின் பஞ்சாப் பயணம் தொடர்பான பதிவுகளைப் பத்திரப்படுத்தி பாதுகாக்க பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளருக்கு உத்தரவிட்டு வழக்கை இன்றைய தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள், மத்திய அரசு அமைத்துள்ள விசாரணை குழு, பஞ்சாப் அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதற்கு அதிருப்தி தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து மத்திய அரசின் வழக்கறிஞர், மத்திய அரசு குழுவே பிரதமர் சென்ற பாதை மறிக்கப்பட்டது குறித்து விசாரணை செய்து, அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம் எனப் பரிந்துரைத்தார்.

 

ஆனால் பஞ்சாப் அரசு, சுதந்திரமான விசாரணை குழுவை அமைத்து பிரதமரின் கார் சென்ற பாதை மறிக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தவேண்டும் எனக் கோரியது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்படும் என அறிவித்துள்ளனர். இந்த குழுவில் யார் யார் இடம்பெறுவார்கள் என இன்று அறிவிப்பதாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

 

 

சார்ந்த செய்திகள்