பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் பஞ்சாபில் சாலை வழியாக பயணம் செய்தபோது, போராட்டக்காரர்கள் சாலை மறியல் செய்தனர். இதனையடுத்து பிரதமர் மோடி, தான் பங்கேற்க இருந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பினார். பிரதமர் சென்ற கார் மறிக்கப்பட்டது பெரும் சர்ச்சையாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரிக்க பஞ்சாப் அரசும், மத்திய உள்துறை அமைச்சகமும் தனித்தனியே குழு அமைத்தன. இந்தநிலையில் பிரதமர் பயணித்த சாலை மறிக்கப்பட்டது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழு அமைக்கப்படும் என அறிவித்தது.
அதனைத்தொடர்ந்து தற்போது உச்சநீதிமன்றம், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி இந்து மல்ஹோத்ரா தலைமையில், பிரதமர் பயணித்த சாலை மறிக்கப்பட்டது தொடர்பாக விசாரிக்க குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டுள்ளது. இந்த குழுவில் தேசிய புலனாய்வு முகமையின் டிஜிபி, பஞ்சாப் டிஜிபி (பாதுகாப்பு), சண்டிகர் டிஜிபி, பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றத்தின் தலைமை பதிவாளர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். விசாரணை அறிக்கையை விரைவில் அளிக்கும்படி இந்த குழுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்து மல்ஹோத்ரா தலைமையிலான விசாரணை குழு, பிரதமரின் பாதுகாப்பு மீறப்பட்டதற்கான காரணங்கள், அதற்கு காரணமான நபர்கள் குறித்து விசாரணை நடத்தும் என்றும், வருங்காலத்தில் விவிஐபிக்களின் பாதுகாப்பு மீறப்படாமல் இருப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரதமரின் பாதுகாப்பு மீறல் தொடர்பான முக்கியமான பிரச்சனையை மத்திய அல்லது மாநில அரசுகளின் ஒருதலைப்பட்சமான விசாரணைக்கு விட்டுவிட முடியாது என கூறிய உச்சநீதிமன்றம், பஞ்சாப் அரசு மற்றும் மத்திய அரசு அமைத்த விசாரணைக் குழுக்கள் விசாரணை நடத்த தடை விதித்துள்ளது.