புதிய பணியாளர்கள் சேர்க்கை மற்றும் பதவி உயர்விற்கான மருத்துவ தகுதி வழிகாட்டு விதிகளை பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி ஒரு பெண் மூன்று மாதத்திற்கு மேற்பட்ட கர்ப்பிணியாக இருந்தால் அவர் பணியில் சேர தகுதி இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இது போன்றவர்கள் குழந்தை பெற்ற பின் நான்கு மாதம் கழித்தே பணியில் சேர தகுதியானவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பதவி உயர்வுக்கும் இதே விதி பொருந்தும் என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனினும் இது பெண்கள் உரிமையை பறிக்கும் செயல் என ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவ்விதி கடந்த பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பே கொண்டுவரப்பட்டு கடும் எதிர்ப்பு காரணமாக திரும்ப பெறப்பட்டது. தற்போது மீண்டும் அவ்விதி நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. பாலின சமத்துவத்துக்கு எதிரான ஸ்டேட் வங்கியின் இந்த உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி எம்.பி. சு.வெங்கடேசன் நிதியமைச்சருக்கு கடிதம் எழுதினார்.
அதில் அவர், “ஸ்டேட் வங்கி 31.12.2021 அன்று பணி நியமனங்கள் குறித்து வெளியிட்டுள்ள சுற்றறிக்கை அதிர்ச்சி தருகிறது. நாடு முழுவதும் ஜனநாயக அமைப்புகளின், மாதர் இயக்கங்களின், தொழிற் சங்கங்களின் கண்டனத்திற்கு ஆளாகி உள்ளது. ஸ்டேட் வங்கி 2,50,000 ஊழியர்களை கொண்டது, அதில் 62,000 மகளிர் ஊழியர்களை கொண்ட பெரிய அரசு வங்கி.
வங்கித் துறையில் இவ்வளவு அதிகமாக வேலை வாய்ப்பு தருகிற இன்னொரு வங்கி கிடையாது. ஆனால் இவ்வளவு பெரிய வங்கி பாலின நிகர் நிலைப் பார்வையில் இவ்வளவு சுருங்கி இருப்பது வேதனை அளிக்கிறது. ஸ்டேட் வங்கியின் சுற்றறிக்கை திரும்ப பெறப்பட வேண்டும், கருவுற்ற மகளிருக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி களையப்பட வேண்டும்” என அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். மேலும், இந்தக் கடிதத்தை ஸ்டேட் வங்கி தலைவருக்கும் அவர் அனுப்பியிருந்தார்.
இந்நிலையில், அந்த உத்தரவை திரும்ப பெறுவதாக எஸ்.பி.ஐ. அறிவித்துள்ளது. இதுகுறித்து எஸ்.பி.ஐ. வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எஸ்.பி.ஐ. எப்போதும் பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் முனைப்புடன் இருந்து வருகிறது. இப்போது நமது பணியாளர்களில் சுமார் 25% பேர் பெண் ஊழியர்களாக உள்ளனர்.
கோவிட் காலத்தில், அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களின்படி, கர்ப்பிணிப் பெண் ஊழியர்கள் அலுவலகத்திற்குச் செல்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
இருப்பினும், பொதுமக்களின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, கர்ப்பிணிப் பெண்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான திருத்தப்பட்ட வழிமுறைகளை கைவிடவும், இந்த விஷயத்தில் ஏற்கனவே உள்ள வழிமுறைகளைத் தொடரவும் எஸ்.பி.ஐ. முடிவு செய்துள்ளது’ என எஸ்.பி.ஐ. அந்த அறிக்கையில் கூறியுள்ளது.