Skip to main content

‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ - ஒரு வருடமாக இளைஞரை துரத்தும் வினோதப் பறவை 

Published on 28/02/2023 | Edited on 28/02/2023

 

 sarus crane follows its rescuer for a year

 

தன்னை காப்பாற்றியவரை ஒரு வருடமாக பின்தொடரும் ஸாரஸ் கேன் பறவையின் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் அதிகளவில் ஷேர் செய்யப்படுகிறது.

 

உத்தரபிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்துக்கு அருகே உள்ளது அவுரங்காபாத் கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் முஹம்மது ஆரிஃப். 30 வயதான இவர், மெஷின் ஆப்ரேட்டராக வேலை செய்து வருகிறார். தனக்கு அழைப்பு வரும் இடங்களுக்கெல்லாம் நேரில் சென்று தன்னுடைய பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார் முஹம்மது ஆரிஃப். இவர் தன்னுடைய பைக்கில் நாள்தோறும் 40, 50 கிலோ மீட்டர் வரை பயணம் செய்வது வழக்கம். இந்நிலையில் கடந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் கௌரிகஞ்ச் பகுதியில் அவர் சென்றுகொண்டிருந்தபோது ஒரு வயல் வெளியில் ஸாரஸ் கேன் வகையைச் சார்ந்த பறவை ஒன்று அடிபட்டு கிடந்துள்ளது. இதைப் பார்த்த ஆரிஃப், அந்தப் பறவையை விட்டுச் செல்ல மனமில்லாமல் தன்னுடைய வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

 

அதன்பிறகு, பறவையின் உடைந்த கால்களுக்கு மருந்து போட்டுவிட்டு மூங்கில் குச்சிகளைக் கொண்டு காலில் கட்டு போட்டு சிகிச்சை அளித்துள்ளார். அதுமட்டுமின்றி, அந்தப் பறவை குணமாவதற்கு சிறிது காலம் தேவைப்படும் என்பதால் அதற்காகவே தனியாக கூரையில் ஷெட் அமைத்து அதில் அந்தப் பறவையை பாதுகாத்து வந்துள்ளார். அதன்பிறகு, ஸாரஸ் கேன் பறவை முழுவதுமாக குணமடைந்த பிறகு முஹம்மது ஆரிஃப் எங்கு சென்றாலும் பின்னாலேயே வந்துவிடும். மேலும், அவரைத் தவிர வேறு யாராவது உணவு கொடுத்தால் அவர்களை தாக்கிவிடும் எனக் கூறப்படுகிறது.

 

இந்நிலையில், ஸாரஸ் கேன் பறவை முழுவதுமாக குணமடைந்ததால் அதைக் கொண்டுபோய் காட்டுக்குள் விட்டுள்ளார். ஆனால், காட்டுக்குள் செல்வதை விரும்பாத அந்தப் பறவை, ஆரிஃப் பைக்கிற்கு பின்னாலேயே அவரைப் பின்தொடர்ந்து வந்துள்ளது. ஒரு நிமிடம் கூட ஆரிஃப்பை விட்டுப் பிரியாமல் எப்போதும் அவரையே சுற்றி வருகிறது. இதுதொடர்பான வீடியோ காட்சி தற்போது சோசியல் மீடியாவில் அதிகளவில் ஷேர் செய்யப்படுகிறது.

 

- சிவாஜி

 

 

 

சார்ந்த செய்திகள்