Skip to main content

பிரியங்காவுடன் 3 மணி நேரம் ஆலோசனை... சச்சின் பைலட் போட்ட கண்டிஷன்...

Published on 18/07/2020 | Edited on 18/07/2020

 

sachin pilot phone call to priyanka gandhi

 

ஒரு வருடத்திற்குள் தன்னை முதல்வராக நியமிக்க ஒப்புக்கொண்டால் ராகுல் மற்றும் சோனியா காந்தியை நேரில் சந்திக்க ஒப்புக்கொள்வதாக பிரியங்கா காந்தியிடம் சச்சின் பைலட் தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

ராஜஸ்தானில் கடந்த 2018 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்த சூழலில், அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகியோருக்கு இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்தச் சூழலில், சில தினங்களுக்கு முன்பு ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சச்சின் பைலட் ஆதரவாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து 30 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகக் கூறும் சச்சின் பைலட், தனது ஆதரவாளர்களுடன் இணைந்து காங்கிரஸ் கட்சிக்குக் கொடுத்துவந்த ஆதரவைத் திரும்பப்பெறுவார் எனத் தகவல்கள் வெளியாகியது. ஆனால் எதிர்பாராத திருப்பமாக அவரை கட்சியிலிருந்தும், துணை முதல்வர் பதவியிலிருந்தும் காங்கிரஸ் கட்சி நீக்கியது.

 

இந்நிலையில் ஒரு வருடத்திற்குள் தன்னை முதல்வராக நியமிக்க ஒப்புக்கொண்டால் ராகுல் மற்றும் சோனியா காந்தியை நேரில் சந்திக்க ஒப்புக்கொள்வதாக பிரியங்கா காந்தியிடம் சச்சின் பைலட் தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரியங்கா காந்தியின் நெருங்கிய வட்டாரங்கள் இதுகுறித்து கூறுகையில், பதவி பறிப்புக்கு முன்னர் சச்சின் பைலட் சுமார் மூன்று மணிநேரம் பிரியங்கா காந்தியுடன் தொலைபேசியில் உரையாடியதாகவும், அப்போது, ஒரு வருடத்திற்குள் தான் ராஜஸ்தான் முதல்வராக நியமிக்கப்பட வேண்டும் என பிரியங்காவிடம் கோரிக்கை வைத்ததாகவும், அவர்கள் சச்சினின் கோரிக்கையை ஏற்கத்தயாராக இல்லை என்பதால் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரைச் சந்திக்க சச்சின் மறுத்துவிட்டார் எனவும் கூறப்படுகிறது. முதல்வர் பதவி குறித்து உறுதியாகக் கூறமுடியாவிட்டால் காந்திகளுடன் சந்திப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும் சச்சின் பைலட் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் குழப்பங்களுக்குக் காரணமான சச்சின் பைலட் உள்பட 19 சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தகுதிநீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்