Skip to main content

காலம் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை; எங்கும் தடை செய்யப்பட்ட ராகுல்

Published on 29/06/2023 | Edited on 29/06/2023

 

Rahul Gandhi was stopped by the police when he went to meet people in Manipur

 

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு 19 வயது இளம்பெண் 4 பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். நாக்கு துண்டாகி, முதுகுத் தண்டு பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த அந்த பெண் இரண்டு வார சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்தார். அதோடு உயிரிழந்த பெண்ணை இரவோடு இரவாக போலீஸ் அதிகாரிகளே மயானத்திற்கு எடுத்துச் சென்று தீயிட்டுக் கொளுத்தினர். பெற்றோர்களும், உறவினர்களும் கூட பெண்ணின் முகத்தைப் பார்க்கவிடாமல் பெண் தகனம் செய்யப்பட்டது இந்தியாவையே உலுக்கியது. உ.பியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று கூறி எதிர்க்கட்சிகள் பொதுமக்கள் என அனைவரும் கொந்தளித்தனர். 

 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தை நேரில் பார்த்து ஆறுதல் கூறவிருப்பதாகச் செய்திகள் வெளியானது. அதனைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மாவட்டத்தின் அனைத்து நுழைவாயில்களும் அடைக்கப்பட்டன. இருப்பினும் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் பெண்ணின் குடும்பத்தைப் பார்க்க நேரில் சென்றனர். ஆனால் ராகுலையும் பிரியங்கா காந்தியையும் மாவட்டத்திற்கு உள்ளே நுழைய விடாமல் உ.பி போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறச் சென்ற ராகுலையும், பிரியங்காவையும் கைது செய்தது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. 

 

இந்த நிலையில் மணிப்பூர் கலவரம் தற்போது இந்தியாவையே உலுக்கி வருகிறது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பைரன் சிங் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதன் பின்னணியில் பாஜக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மைத்தேயி சமூக மக்கள் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் முன்னேறி இருக்கும் நிலையில், அவர்களை எஸ்டி பட்டியலில் சேர்ப்பது ஏற்கனவே நலிவடைந்து இருக்கும் பழங்குடியின மக்களை மேலும் பாதிக்கும் எனும் கருத்து அப்பகுதியில் பரவலாக மேலெழுந்தது.

 

இதையடுத்து மைத்தேயி சமூகத்தைப் பழங்குடியின பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரின் சுராசந்த்பூரில் பழங்குடியின மக்கள் பாதயாத்திரை மேற்கொண்டனர். அப்போது, இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதல் இருதரப்புக்கும் இடையேயான கலவரமாக மாறி ஒரு மாதத்திற்கும் மேலாக மணிப்பூரே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இரண்டு சமூகங்களைச் சேர்ந்த மக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு நூற்றுக்கணக்கான மக்கள் கொள்ளப்பட்டுள்ளனர். மணிப்பூருக்குச் சென்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தியும் மணிப்பூர் கலவரம் ஓயவில்லை. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், இந்திய மக்கள் அனைவருமே மணிப்பூர் கலவரம் குறித்துப் பேசி வரும் நிலையில், பிரதமர் மோடி மணிப்பூர்  என்ற வார்த்தையைக் கூட உச்சரிக்க மறுக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் சரமாரியாக விமர்சனங்களை முன் வைத்து வருகின்றன.

 

Rahul Gandhi was stopped by the police when he went to meet people in Manipur

 

இந்த நிலையில் ராகுல் காந்தி இன்று டெல்லியில் இருந்து மணிப்பூர் மாநிலத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். கலவரம் நடந்து வரும் மணிப்பூருக்கு பிரதமர் கூட செல்லாமல் இருக்கும் போது ராகுல் காந்தி சென்று பார்க்க இருப்பதாகச் செய்திகள் வெளியான போதே பேசுபொருளாக மாறியிருந்த நிலையில், இன்று மணிப்பூர் வந்த ராகுல் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களைச் சந்திக்கச் சென்றார். ஆனால் மக்களைச் சந்திக்க ராகுலுக்கு மணிப்பூர் மாநில பாஜக அரசு தடை விதித்தது. ஆனால் எதற்காகத் தடுத்து நிறுத்தப்பட்டார் என்ற தகவலை அரசு தரப்பில் தெரிவிக்காததால் காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். 

 

ஹத்ராஸ் சம்பவம், ஒற்றுமைப் பயணம், மணிப்பூர் கலவரம் என மக்களோடு ராகுல் காந்தி நிற்கும்போதெல்லாம் மோடி தலைமையிலான பாஜக அரசு அவரைத் தடுத்து நிறுத்துகிறது. இப்படிச் செய்வதால் ராகுலை மக்களிடம் இன்னும் நெருக்கமாகவே கொண்டு செல்லுகிறது எனக் காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்