Skip to main content

“ஒற்றை வெள்ளை டி- ஷர்ட் மட்டுமே” - ராகுல் காந்தி

Published on 11/11/2023 | Edited on 11/11/2023

 

Rahul gandhi spoke in madhya pradesh

 

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியைக் கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு  கடந்த 7 ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று முடிந்தது. அதேபோல், மிசோரம் மாநிலத்திலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. 

 

அதன்படி, மத்தியப் பிரதேச மாநிலத்தில் வருகிற நவம்பர் 17 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸும், பா.ஜ.க.வும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மத்தியப் பிரதேசம், சத்னா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “பிரதமர் மோடி ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஒன்று அல்லது இரண்டு உடைகளை மாற்றுகிறார். அவர் ஒரே உடையைத் திரும்ப அணிந்து நீங்கள் யாராவது பார்த்திருக்கிறீர்களா? நான் இந்த ஒற்றை வெள்ளை நிற டி.ஷர்ட்டை மட்டுமே அணிந்து தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்கிறேன்.

 

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். இந்த கணக்கெடுப்பின் அடிப்படையில் நலத்திட்டங்கள் உருவாக்கப்படும். அதேபோல், மக்களவை தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் தேசிய அளவிலும் இதுபோன்று கணக்கெடுப்பு நடத்தப்படும். பண மதிப்பிழப்பு நடவடிக்கை, சரியான முறையில் ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தாதது போன்ற காரணத்தால் சிறு, குறு தொழிலாளர்களும், வர்த்தகர்களும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், நாட்டில் வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்துவிட்டது” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்