காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்கிற பெயரில் இந்தியா முழுவதும் 12 மாநிலங்களில் 3,570 கிலோ மீட்டர் நடைப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து உரையாடி வருகிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை அசைத்து இந்த நடைப்பயணத்தை தொடங்கி வைத்தார். இந்தியாவின் இறையாண்மையும் அரசியலமைப்புச் சட்டமும் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்தப் பயணத்தை 150 நாட்களுக்கு மேற்கொள்ளும் ராகுல் காந்தியின் இந்தப் பயணமானது தற்போது 129வது நாளை எட்டியுள்ளது.
தற்போது காஷ்மீரில் நடைப்பயணத்தை ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் சனிக்கிழமையான நேற்று முன்தினம் ராகுலின் பாதயாத்திரைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் காஷ்மீரில் உள்ள நர்வால் பகுதியில் அடுத்தடுத்து வெடித்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 9 பேர் காயம் அடைந்தனர். இருப்பினும் நேற்று காலை ராகுல் காந்தி காலை ஏழு மணி அளவில் தனது நடைப்பயணத்தை கதுவா மாவட்டத்தில் உள்ள ஜம்மு பதான்கோட் நெடுஞ்சாலை அருகே சர்வதேச எல்லையை ஒட்டி உள்ள ஹிரா நகரில் இருந்து தனது பாதயாத்திரையைத் தொடங்கினார்.
குண்டுவெடிப்பு சம்பவத்தை கருத்தில் கொண்டு ராகுல் நடைப்பயணம் மேற்கொள்ளும் வழியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. போலீசார் மற்றும் மத்திய ரிசர்வ் போலீசார் என ராகுல் காந்திக்கு பாதுகாப்பு வளையத்தை பலப்படுத்தி இருந்தனர். காலை எட்டு மணி அளவில் சம்பா மாவட்டத்தில் உள்ள தப்பியால் கக்வால் பகுதியில் நடைப்பயணம் மேற்கொண்டபோது அங்கு இருந்த கட்சி தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 25 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இந்த நடைப்பயணமானது சம்பா மாவட்டம் விஜயபூர் எட்னா இடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜம்மு காங்கிரஸ் தலைவர் விகாஸ் ரசூல் வானி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.