Skip to main content

தெருநாய்களை விஷம் வைத்துக் கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!

Published on 21/10/2021 | Edited on 21/10/2021

 

puducherry street dogs incident police investigation

 

புதுச்சேரி மாநிலம், காமராஜர் நகர் பகுதியில் உள்ளது சுதந்திர பொன்விழா நகர். அந்த பகுதியில் 200- க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் 15- க்கும் மேற்பட்ட தெருநாய்கள் உள்ளன. இதனை அப்பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகளே பராமரித்து வளர்த்து வருகின்றனர். 

 

இந்நிலையில் இன்று (21/10/2021) மதியம் 10- க்கும் மேற்பட்ட நாய்கள் திடீரென வாந்தி எடுத்தும், உயிருக்கு துடித்துக் கொண்டும் இருந்துள்ளன. இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக தண்ணீர், மருந்து கொடுத்துள்ளனர். இருந்தபோதும் 7 நாய்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டன.

 

இதனையடுத்து அப்பகுதி மக்கள் இதுகுறித்து கோரிமேடு தன்வந்திரி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் அருகில் வசிக்கும் சிலர் நாய்களை கொல்லும் நோக்கிலேயே கோழிக்கறி மூலம் செடிகளுக்கு பயன்படுத்தும் கிருமிநாசினிகளை கொண்டு கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. 

 

அப்பகுதியில் வெளியாட்களை அங்குள்ள நாய்கள் விடாததாலும், அப்பகுதியில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையிலும் நாய்கள் இருந்துள்ளதால் கல்மனம் கொண்ட சிலர் இதனை செய்திருப்பது தெரியவந்ததையடுத்து, இரண்டு பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

கால்நடைத்துறை அதிகாரிகள் உடல்கூறு பரிசோதனை செய்து சென்றுள்ளனர். 15 நாட்கள் கழித்துதான் பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

 

கொடூர மனம் படைத்த சிலரால் வாயில்லா விலங்குகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்