டெல்லியில் உள்ள அரசு குடியிருப்பை காலி செய்யுமாறு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், அவர் விரைவில் உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவிற்குக் குடிபெயர வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 1997ஆம் ஆண்டு பாதுகாப்பு காரணத்திற்காகப் பிரியங்கா காந்திக்கு டெல்லி லோதி எஸ்டேட்டில் உள்ள 35-வது எண் குடியிருப்பை அரசு ஒதுக்கியிருந்தது. அதன்பிறகு அந்த வீட்டிலேயே வசித்துவந்த பிரியங்கா காந்தி, தனது கட்சி சார்ந்த சந்திப்புகளையும் அங்கேயே மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதிக்குள் அந்த வீட்டைப் பிரியங்கா காந்தி காலி செய்யவேண்டும் என மத்திய அரசு நேற்று நோட்டீஸ் அனுப்பியது. அவருக்கு வழக்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.
இதனையடுத்து, அவர் உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவிற்குக் குடிபெயர வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே இடம்பெயர்வதற்காகப் பிரியங்கா காந்தி திட்டமிட்டிருந்த நிலையில், கரோனா வைரஸ் ஊரடங்கு மற்றும் மகளின் பொதுத்தேர்வு ஆகியவற்றால் டெல்லியிலேயே வசித்து வந்தார். இந்த சூழலில் மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளதை அடுத்து அவர் விரைவில் லக்னோவுக்கு இடம்பெயர்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது. லக்னோவில் உள்ள முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அத்தை ஷீலா கவுல் வீட்டில் அவர் குடியேறுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநில அரசியலில் தொடர்ந்து கவனம் செலுத்தும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.