மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்கள் ஆங்கிலேயர்களின் கிழக்கு இந்திய நிறுவனத்தின் ஆட்சியைப் பிரதிபலிப்பது போல் உள்ளதாக பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மூன்று விவசாய மசோதாக்களுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் எதிர்க்கட்சிகளும், விவசாயிகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் விவசாயிகள் தரப்பில் 24 முதல் 26-ம் தேதி வரை, ரயில் மறியல் போராட்டங்கள் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும், இன்று நாடு முழுவதும் பாரத் பந்த் நடத்தவும் பல்வேறு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன. விவசாயிகளின் இந்தப் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி தனது ஆதரவைத் தெரிவித்திருந்தது.
இந்தச் சூழலில், விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி, "மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் மசோதாக்களும், ஆங்கிலேயர்களின் கிழக்கு இந்திய நிறுவனத்தின் ஆட்சியைப் பிரதிபலிப்பது போல் இருக்கிறது. விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதார விலை அவர்களிடம் இருந்து பறிக்கப்படும். கோடீஸ்வரர்களிடம் செய்யப்படும் ஒப்பந்த விவசாயம் மூலம் விவசாயிகள் வலுக்கட்டாயமாக அடிமைகளாக்கப்படுவார்கள். விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு விலையும் கிடைக்காது, மரியாதையும் இருக்காது. விவசாயிகள் தங்கள் சொந்த நிலத்திலேயே தொழிலாளியாக்கப்படுவார்கள். இந்த அநீதி விவசாயிகளுக்கு நடக்க அனுமதிக்கக் கூடாது" என்று தெரிவித்துள்ளார்.