ஒடிசா ரயில் விபத்தில் தற்போதைய நிலவரப்படி 261 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் 800 பேர் இந்த ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்துள்ளதாகவும் சென்னையைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் இந்த ரயிலில் வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் 900க்கும் மேற்பட்டோர் இதுவரை காயம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமடையவோ, உயிரிழக்கவோ நேரிடவில்லை. இருப்பினும் 261 பேர் உயிரிழந்தது சர்வதேச அளவில் பெரும் சோகத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்த பாஹாநாஹா பகுதிக்கும் தற்போதைய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்னவிற்கும் தொடர்பு உள்ளது. அவர் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த பொழுது அந்த மாவட்டத்தில் கலெக்டராக இருந்துள்ளதால் தனிப்பட்ட முறையில் நெருக்கமான மாவட்டத்தில் இப்படி ஒரு விபத்து ஏற்பட்டிருப்பது அவருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு பிரதமர் மோடி நேரில் சென்று தற்போது ஆய்வு செய்து வருகிறார். புவனேஸ்வர் விமான நிலையத்திற்கு வந்த மோடி விபத்து நடந்த பகுதிக்கு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் சென்றுள்ளார்.