உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (10/02/2022) காலை 07.00 மணிக்கு தொடங்கியது. மீரட், மதுரா உள்ளிட்ட மாவட்டங்களில் முதற்கட்டமாக 58 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு மாலை 06.00 நடைபெற உள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணியில் மாநில காவல்துறையினருடன் இணைந்து துணை ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குச்சாவடி மையங்களில் காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, வாக்களித்து வருகின்றனர். அரசின் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
முதற்கட்டத் தேர்தலில் 623 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில், 2.27 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். 403 சட்டமன்றத் தொகுதி கொண்ட உத்தரப்பிரதேசத்தில் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. 11 மாவட்டங்களில் 58 சட்டமன்றத் தொகுதிகளில் நடக்கும் தேர்தலில், கடந்த முறை பா.ஜ.க. 53 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.