Skip to main content

“நான்தான் பாலத்தை கட்டவேண்டும் என்பது பகவான் கிருஷ்ணரின் முடிவு” - பிரதமர் மோடி பெருமிதம்

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
 PM Modi proudly says It was Lord Krishna's decision that I should build the bridge

குஜராத் மாநிலத்தில், 4 வழி கொண்ட கேபிள் பாலம் ஒன்றை பிரதமர் மோடி நேற்று (25-02-24) திறந்து வைத்தார். நாட்டின் மிக நீண்ட பாலமான இந்த பாலத்திற்கு சுதர்சன் சேது அல்லது சுதர்சன் பாலம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதையடுத்து, துவாரகா தீவுக்கு அருகில் உள்ள துவாரகா கடற்கரையில் மூழ்கி பிரதமர் மோடி பார்வையிட்டு பிரார்த்தனை செய்தார். மேலும் அவர், நீருக்கடியில், கிருஷ்ணருக்கு அடையாளமாக மயில் இறகுகளை கொண்டுசென்று காணிக்கையாக செலுத்தினார். இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

அதன் பிறகு, துவாரகாவில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, “குஜராத்தில் நான் முதல்வராக இருந்த போது, நான் சுதர்சன் சேது திட்டத்தை, அப்போது இருந்த காங்கிரஸ் அரசிடம் முன்வைத்தேன். ஆனால், அவர்கள் அதற்கு செவி சாய்க்கவில்லை. சுதர்சன் பாலத்தை நான் கட்ட வேண்டும் என்பதை பகவான் கிருஷ்ணர் சாத்தியப்படுத்தியுள்ளார். இன்று துவாராகவிற்கு நான் ஒரு மயில் தோகையை எடுத்துச் சென்று சமர்ப்பித்துள்ளேன். இன்று என் கனவு நனவாகியதால் என் இதயம் உணர்ச்சிகளால் நிரம்பி வழிகிறது.

புதிய இந்தியாவுக்கான உத்தரவாதத்தை நான் மக்களுக்கு வழங்கியபோது, எதிர்கட்சிகள் என்னை கேலி செய்தனர். ஆனால் இன்று ஒவ்வொரு இந்தியனும் தங்கள் கண் முன்னே ஒரு புதிய இந்தியா கட்டப்படுவதை பார்க்க முடிகிறது. காங்கிரஸ், நீண்ட காலம் ஆட்சியில் இருந்த போதிலும் மக்களுக்கு எந்த ஒரு நன்மையும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இல்லை. ஏனெனில் அவர்களின் முயற்சி அனைத்தும் ஒரு குடும்பத்தை மட்டும் முன்னேற்றுவதற்காகவே. இருந்தது. ஊழல்களை மறைத்து ஐந்தாண்டுகள் எப்படி அரசாங்கத்தை நடத்துவது என்பதில் மட்டுமே அவர்கள் கவனம் செலுத்தினார்கள். 2014க்கு முந்தைய 10 ஆண்டுகளில் இந்தியா பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இருந்தது. 

2014-ல் நீங்கள் அனைவரும் என்னை ஆசிர்வதித்து டெல்லிக்கு அனுப்பிய போது கொள்ளையடிக்கப்படாமல் நாட்டைக் காப்பாற்றுவேன் என்று வாக்குறுதி அளித்து காங்கிரஸ் ஆட்சியில் நடந்த அனைத்து ஊழல்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு இப்போது இந்தியா உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக உள்ளது. இதன் விளைவுதான் இப்போது இந்தியாவில் நீங்கள் பார்க்கக்கூடிய கட்டுமான அற்புதங்கள்” என்று கூறினார்.

சார்ந்த செய்திகள்