இந்தியா தலைமையில், டெல்லியில் நேற்றும், இன்றும் என இரு நாட்கள் டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர். மாநாட்டில் கலந்துகொள்ள வருகை தந்த சர்வதேச தலைவர்களுக்குப் புகழ்பெற்ற கோனார்க் சக்கரம் பின்னணியில் இருக்கும்படி சிவப்புக் கம்பளத்தில் நின்று பிரதமர் மோடி உற்சாக வரவேற்பு அளித்தார். மொரோக்கோ நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ஜி 20 மாநாட்டில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் நாட்டின் பெயரைக் குறிக்க பிரதமர் மோடியின் முன்பாக வைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகையில் இந்தியா என்பதற்குப் பதிலாக ‘பாரத்’ என இடம்பெற்றது.
நேற்றைய ஜி 20 மாநாட்டில் கூட்டறிக்கைக்கு உலக தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். அத்தோடு, உக்ரைன்-ரஷ்யா போருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும், பொருளாதார வளர்ச்சிக்கான முடிவுகள் எடுக்கும் இடத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொண்டு வர வேண்டும், 2030க்குள் பசுமை இல்ல வாயுக்கள் வெளியிடுதல் 43 சதவீதம் அளவுக்கு குறைக்க கவனம் செலுத்த வேண்டும் என பல முக்கியமான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் இன்று ஜி 20 உச்சி மாநாட்டின் இரண்டாவது கூட்டம் நடைபெற்றது. இதில் ஜி-20 நாடுகள் அமைப்பின் தலைமை பொறுப்பை பிரேசில் ஏற்றது. பிரேசில் அதிபர் லூலா டா சில்வாவிடம் ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை பிரதமர் மோடி ஒப்படைத்தார். கடந்த ஓராண்டாக ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா வகித்து வந்த நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தது. இந்த நிலையில் ஜி-20 அமைப்பின் அடுத்த தலைமை பொறுப்பை பிரேசில் ஏற்றுள்ளது.