மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகவும், அசாமில் 3 மூன்று கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, முதல் கட்ட தேர்தல் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டன.
இந்தநிலையில், மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் இரண்டாம் கட்ட தேர்தல் இன்று (01.04.2021) நடைபெறுகிறது. இதனையடுத்து இந்திய பிரதமர் மோடி, அதிக அளவில் வாக்களிக்குமாறு இரு மாநில வாக்காளர்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அசாமில் இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. இவ்விரண்டாம் கட்டத் தேர்தலில், தங்கள் உரிமையைப் பயன்படுத்தி ஜனநாயகத் திருவிழாவை வலுப்படுத்துமாறு அனைத்து தகுதியான வாக்காளர்களையும் கேட்டுக்கொள்கிறேன்" என கூறியுள்ளார்.
அதேபோல் தனது இன்னொரு ட்விட்டர் பதிவில், “வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் உள்ள மேற்கு வங்க மக்களை, பெரிய எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.