Skip to main content

உயர்ந்த கட்டணம்; மக்கள் நலனுக்காகவே - இந்திய ரயில்வே விளக்கம்! 

Published on 06/03/2021 | Edited on 06/03/2021

 

railway platform

 

கரோனா ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு, இந்தியாவில் ரயில் சேவை பழைய நிலைக்குத் திரும்பி வரும் நிலையில், குறைந்த தூரம் இயங்கும் பயணிகள் ரயில்களின் கட்டணத்தை திடீரென மத்திய அரசு உயர்த்தியது. இந்த திடீர் கட்டண உயர்வால், பயணிகள் அதிர்ச்சியடைந்ததுடன், தங்களின் அதிருப்தியையும் வெளிப்படுத்தினர். இந்தக் கட்டண உயர்வுக்கு விளக்கமளித்த ரயில்வே அமைச்சகம், கரோனா பரவலை முன்னிட்டு, மக்கள் தேவையற்ற பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்க குறைந்த தூர ரயில் கட்டணத்தை உயர்த்தியதாக தெரிவித்திருந்தது.

 

இந்தநிலையில் ரயில்வே பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளின் விலை உயர்ந்துள்ளது. சில இடங்களில் 10 ரூபாயாக இருந்த பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளின் விலை 50 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கும் அதிருப்தி எழுந்த நிலையில், இந்திய ரயில்வே மீண்டும் கரோனவைக் காரணம் காட்டி விளக்கமளித்துள்ளது.

 

இதுகுறித்து இந்திய ரயில்வே, “பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டிருப்பது ஒரு தற்காலிக நடவடிக்கை. மேலும் இது, பயணிகளின் பாதுகாப்பிற்காகவும், ரயில் நிலையங்களில் அதிக கூட்டத்தைத் தடுக்கவும் ரயில்வே நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒரு கள நடவடிக்கையாகும்” எனத் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தற்காலிக விலை உயர்வு சில இடங்களில் மட்டுமே செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ள ரயில்வே நிர்வாகம், “ஒரு சில மாநிலங்களில் கரோனா பரவல் அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, மக்கள் தேவையில்லாமல் ரயில்வே பிளாட்ஃபார்ம்களில் கூடுவதை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், இது மக்கள் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவாகும்” எனவும் தெரிவித்துள்ளது.

 

“தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகள் விலை தற்காலிகமாக உயர்த்தப்பட்டு, பின்னர் குறைக்கப்படுவது வழக்கம்தான்” எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்