Skip to main content

விவசாயிகளுக்காக வெளியே வந்த கட்சி; மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி?

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
A party that came out for farmers and Alliance with BJP again in punjab

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்தியா கூட்டணியில் இருந்த பல்வேறு கட்சிகள், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ராஷ்டிரிய லோக் தளம் என ஒவ்வொன்றாக பா.ஜ.க கூட்டணியில் இணைந்து வருகிறது. அந்த வகையில், பா.ஜ.க கூட்டணியில் ஏற்கனவே பிரிந்து சென்ற பஞ்சாபில் உள்ள பிரபலமான கட்சி தற்போது மீண்டும் பா.ஜ.க கூட்டணியில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 

பஞ்சாப் மாநிலத்தில் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநில விவசாயிகள்  கடந்த 2020ஆம் ஆண்டு, மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வந்தனர். அப்போது விவசாயிகளினுடைய கோரிக்கையை ஏற்காமல் மத்திய அரசு புறக்கணித்தது. அதனால், பா.ஜ.க கூட்டணியில் இருந்த அகாலி தளம் கட்சி, அந்த கூட்டணியில்  இருந்து விலகி விவசாயிகளுக்காக ஆதரவாக இருந்தது. அப்போது இது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இதனையடுத்து, விவசயிகளின் கோரிக்கையான, விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்பதாக  மத்திய அரசு வாக்குறுதி அளித்ததால், அந்த போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். 

இந்த நிலையில், மக்களவை தேர்தல் நெருங்குவதையொட்டி, பஞ்சாபில் அரசியல் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாப் மாநிலத்தில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்திருந்தது. அந்த வகையில், பா.ஜ.க கூட்டணியில் பிரிந்து சென்ற அகாலி தளம் கட்சி மீண்டும் பா.ஜ.க கூட்டணியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்த பின்னர், கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்றும் கூறப்படுகிறது. 

இதற்கிடையில், மத்திய அரசு சார்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தின் போது விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியான விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கக்கோரி டெல்லியில் நாளை  (13.02.2024) விவசாயிகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்