Skip to main content

சன்னிலியோனின் புத்தாண்டு நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு! போஸ்டர்கள் கிழிப்பு! 

Published on 31/12/2021 | Edited on 31/12/2021

 

Opposition to Sunilyon's New Year's show in pondicherry

 

புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாட அரசு சார்பில் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நான்கு இடங்களில் பாடல் மற்றும் நடன நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. தேசிய அளவில் புகழ்பெற்ற 45 நடன குழுவினர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், கமர் பிலிம் பேக்டரி சார்பில் பழைய துறைமுகத்தில் பிரபல ஹாலிவுட் நடிகை சன்னி லியோனின் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டிச. 30, 31, ஜனவரி 1 ஆகிய மூன்று தினங்கள் நடிகை சன்னி லியோனின் கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கு தமிழர்களம் உள்ளிட்ட பல்வேறு பொதுநல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 

 

இந்த நிலையில், தமிழர்களம் அமைப்பின் தலைவர் கோ.அழகர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கடற்கரை சாலையில் ஒன்று திரண்டு கலை நிகழ்ச்சி நடைபெறும் அரங்கை இழுத்து மூடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்களை போலீஸார் தடுப்புக் கட்டை போட்டு தடுத்தனர். ஆனால் தடுப்புக் கட்டையை தூக்கி எறிந்து கலை நிகழ்ச்சி நடைபெறும் கூட்ட அரங்கை நோக்கி போராட்டக்காரர்கள் ஓடினர். இதனையடுத்து போலீசார் அவர்களை தடுக்கும் போது இரு தரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து கூட்ட அரங்கிற்குள் சென்ற அவர்கள், கதவை திறந்து சென்று, நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் அமர்ந்து கண்டன முழக்கங்கள் எழுப்பினர். இதையடுத்து அத்துமீறி போராட்டம் நடத்தியதாக கூறி போராட்டக்காரர்களை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து சன்னி லியோனின் பேனர் மற்றும் போஸ்டர்களை கிழித்ததால் பரபரப்பு காணப்பட்டது.

 

Opposition to Sunilyon's New Year's show in pondicherry

 

இதுகுறித்து தமிழர் களம் தலைவர் கோ.அழகர் கூறும்போது, "கரோனா, ஒமிக்ரான்  நோய் தொற்று பரவலாக இருக்கின்ற காலகட்டத்தில் அண்டை மாநிலங்களான தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்ற பெயரில் கலாச்சார சீரழிவு கொண்டாட்டங்களுக்கு புதுச்சேரி அரசு அனுமதி அளித்துள்ளது. புதுச்சேரியின் கலாச்சாரத்தை சீரழிக்கும் முதல்வர் மற்றும் துணைநிலை ஆளுநரின் நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது. அதுபோல் பிரபலங்களை கொண்டு நிகழ்ச்சிகள் நடத்த கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவையும் புதுச்சேரி அரசும், அதிகாரிகளும் செயல்படுத்தவில்லை.

 

மேலும் பொது இடங்களில் பேனர்கள் வைப்பதற்கு உயர் நீதிமன்ற தடை உள்ள நிலையில் பிரபலங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக விளம்பரங்கள், பேனர்கள் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. அந்த சட்ட மீறல்களையும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. சுற்றுலா வருமானம் என்ற பெயரில் புதுச்சேரியில் கலை கலாச்சாரத்திற்கும், மாண்புக்கும் குந்தகமாக மது, மாது, நடன கேளிக்கைகளுக்கு ஆளுகின்ற அரசாங்கம் அனுமதிப்பது மாநில மக்களை, மண்ணின் மைந்தர்களை கேவலப்படுத்தும் விதமாக உள்ளது. எனவே இதுபோன்ற கலாச்சார சீரழிவு நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கவில்லை என்றால் எங்களின் போராட்டம் தொடரும்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்