Skip to main content

“எம்.எல்.ஏக்களை அதிகாரிகள் சந்திக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது” - சபாநாயகர் செல்வம் பேட்டி

Published on 06/06/2023 | Edited on 06/06/2023

 

Officials' refusal to meet MLAs is reprehensible - Speaker Selvam Peti

 

புதுச்சேரியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளில் ஊழல், முறைகேடுகள் நடப்பதாக உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ நேரு குற்றம் சாட்டி வந்தார். தனது தொகுதியில் நடைபெறும் அண்ணா திடல் மேம்பாட்டு பணி ஓராண்டுக்குள் முடித்திருக்க வேண்டும். இரண்டரை ஆண்டுகளாக பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது. அதோடு தரமில்லாமல் பணிகள் நடந்து வருகிறது. தொகுதிக்குட்பட்ட புதிய பேருந்து நிலைய மேம்பாட்டு பணிகளை தொடங்கவில்லை என்றும் புகார் கூறியிருந்தார்.

 

இதை கண்டித்து தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு நேற்றைய தினம் போராட்டம் நடத்தினார். ஆனால் தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா அரசு விழாவில் பங்கேற்றிருப்பதாக அவருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேரு எம்.எல்.ஏ தனது ஆதரவாளர்கள், சமூக நல அமைப்பினரோடு அரசு விழா நடந்த கம்பன் கலையரங்கிற்கு சென்றார். நேரு எம்.எல்.ஏ வரும் தகவல் கிடைத்ததை தொடர்ந்து கம்பன் கலையரங்கின் 2 நுழைவு வாயில்களையும் போலீசார் மூடினர். அங்கு வந்த எம்.எல்.ஏ, அவரின் ஆதரவாளர்களை உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்தனர். இதனால் கோபமடைந்த எம்.எல்.ஏ கேட் மீறி ஏறி குதித்து கம்பன் கலையரங்கில் உள்ளே சென்றார்.

 

அங்கு உலக சுற்றுச்சூழல் தின விழா நடந்து கொண்டிருந்தது. விழா மேடைக்கு கீழே நின்று தலைமை செயலர் மற்றும் அதிகாரிகளை பார்த்து சரமாரியாக குற்றம் சாட்டி பேசினார். மேடையில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், தலைமை செயலர் ராஜீவ் வர்மா ஆகியோரும் இருந்தனர்.

 

இதனால் அரசு விழா சில நிமிடங்கள் தடைபட்டது. அதன் பின்னர் நேரு, விழாவில் முதல் அமைச்சர் பேச்சுக்கு இடையூறு செய்ய விரும்பவில்லை என கூறி வெளியேறினார். இந்த நிலையில் எம்.எல்.ஏ வரும் தகவல் கிடைத்தும் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை காவல்துறை எடுக்கவில்லை என புகார் எழுந்தது. அதோடு அரசு விழாவுக்கு வந்த எம்.எல்.ஏவை தடுப்பதா என்ற கேள்வியும் எழுந்தது. அவரை மட்டும் அனுமதித்து ஆதரவாளர்களை தடுத்திருக்கலாம் என கருத்து தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கம்பன் கலையரங்கில் பாதுகாப்பு பணியிலிருந்த ஓதியஞ்சாலை காவல் நிலைய ஆய்வாளர் கண்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

 

சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவரது பொறுப்பை உருளையன்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் பாபுஜி கூடுதலாக கவனிப்பார் என காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. இதனிடையே அரசு விழாவில் மூடிய கதவை ஏறி குதித்து உள்ளே சென்று வாக்குவாதம் செய்த சுயேட்சை எம்.எல்.ஏ நேரு மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 

இதனிடையே ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம், கம்பன் கலையரங்கத்தில் சட்டமன்ற உறுப்பினர்  கதவை ஏறி குதித்த விவகாரம் போன்றவை குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுடன் சபாநாயகர் செல்வம் அவசர ஆலோசனை நடத்தினார். ADGP ஆனந்தமோகன், எஸ்.பிக்கள் மாறன், செல்வம், சுவாதி சிங், சுயேட்சை எம்.எல்.ஏக்கள் நேரு, பிரகாஷ்குமார், அங்காளன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதையடுத்து அமைச்சர்கள் தேனீ ஜெயக்குமார், சந்திர.பிரியங்கா மற்றும் என்.ஆர்.காங்கிரஸ், தி.மு.க எம்எல்ஏக்களும் கலந்து கொண்டனர்.

 

Officials' refusal to meet MLAs is reprehensible - Speaker Selvam Peti

 

இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சபாநாயகர் செல்வம், “கோரிக்கைகளை வலியுறுத்தி சந்திக்க செல்லும் எம்.எல்.ஏக்களை அதிகாரிகள் சந்திக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது. அதிகாரிகள் எம்.எல்.ஏக்களுக்குரிய மரியாதையை அளிக்க வேண்டும் என உத்தரவிடுகிறேன். மீறும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

 

மேலும் நேற்றைய நிகழ்வுக்கு முதல்வருடன் பேசி சுமூக நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸ் அதிகாரியின் சஸ்பெண்ட்டை நீக்கவும், எம்.எல்.ஏ மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறவும் உத்தரவிட்டுள்ளதாக சபாநாயகர் செல்வம் தெரிவித்தார். மேலும் முதல்வரின் கருணை உள்ளதால் தான் தவறு செய்யும் அதிகாரிகள் தப்பி வந்தனர். தேவைப்பட்டால் சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும் எனவும் எச்சரித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்