புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, " ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்து ஓராண்டுக்கு பிறகு புதுச்சேரி அரசு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளது. நான் கேட்டுக் கொண்ட பிறகே இந்த கூட்டத்தை நடத்தியுள்ளனர். பாராளுமன்றத்திலேயே ஸ்மார்ட் சிட்டி தொடர்பாக எம்.பி.க்களையும் அழைத்தே கூட்டம் நடத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
ஆனால், புதுச்சேரியில் நடந்த கூட்டத்தில் 2 எம்.பி.க்களையும் அழைக்கவில்லை. புதுச்சேரியில் ஸ்மார்ட் திட்டத்தை எங்கே அமல்படுத்துவது? என்பதில் குழப்பம் ஏற்படுத்தியதே தற்போதைய முதலமைச்சர்தான். காங்கிரஸ் அரசு அமைந்த பிறகுதான் தெளிவான முடிவெடுத்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை பெற்றோம்.
இந்த அரசு அமைந்து ஓராண்டாகியும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக நிதி ஒதுக்கவில்லை. ரூபாய் 160 கோடியிலும் ரூபாய் 41 கோடிக்கு மட்டுமே வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திட்டத்தில் பணியாற்ற அதிகாரிகள் இல்லாததும் ஒரு குறையாகும். பிரதமரின் கிராமப்புற இணைப்பு சாலை திட்டத்துக்கு மத்திய அரசு நிதி தருகிறது. இதில் புதுச்சேரியில் 50 கி.மீக்கு சாலை பணிகள் நடைபெற வேண்டும். இதில் கால்வாசி பணிகள் கூட நடக்கவில்லை. காரைக்காலில் இத்திட்டத்தையே தொடங்கவில்லை.
நிதியில்லை என முதலமைச்சர் தெரிவிக்கிறார். மத்திய அரசிடம் கிடைக்கக் கூடிய நிதியை பெறக்கூட இந்த அரசு தயாராக இல்லை. இனி கடந்த கால அரசைக் குறைசொல்வதை நிறுத்திவிட்டு, உங்கள் அரசு என்ன செய்யப்போகிறது? என கவனம் செலுத்துங்கள்.
செயல்படாமல் உள்ள அரசை செயல்படுத்துங்கள். எங்கள் ஆட்சியில் தற்போதுள்ள உள்துறை மந்திரிதான் பவர்புல்லாக இருந்தார். அவரிடம்தான் அனைத்து துறையும் இருந்தது. எனவே கடந்த ஆட்சியில் திட்டங்களை செயல்படுத்தாதது யார்? என மக்களுக்கு தெரியும்" என்றார்.