Skip to main content

இந்தியா தெரிவித்துள்ள இடங்களில் தீவிரவாத முகாம்கள் எதுவுமில்லை! - பாகிஸ்தான்

Published on 28/03/2019 | Edited on 28/03/2019

தீவிரவாத முகாம்கள் இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ள 22  இடங்களில் ஆய்வு மேற்கொண்டோம். ஆனால் அந்த இடங்களில் தீவிரவாத முகாம்கள் எதுவும் இல்லை என்று பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

no terror camps exist Pakistan replied to India

 

பிப்ரவரி மாதம் 14-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட கார் குண்டு தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்கம் பொறுப்பேற்றுக்கொண்டது. இதனை தொடர்ந்து இந்திய விமானப்படையைச் சேர்ந்த போர் விமானங்கள் பிப்ரவரி மாதம் 26-ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பால்கோட் என்ற இடத்தினுள் நுழைந்து 12 மிராஜ் 2000 ஜெட் ரக விமானங்கள் மூலம் எல்லை தாண்டிச்சென்று சுமார் 1000 கிலோ வெடிகுண்டை பயங்கரவாதிகள் முகாம் மீது வீசியது. 
 

இந்த நிலையில் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரிடம் அந்நாட்டில் தீவிரவாத முகாம்கள் மற்றும் அதன் தலைமை இருப்பது பற்றிய தகவல்களை இந்தியா தெரிவித்திருந்தது.


தற்போது இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் இன்று அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், நாங்கள் 50-க்கும் மேற்பட்ட நபர்களை பிடித்து விசாரணை நடத்தினோம். ஆனால், புல்வாமா தாக்குதலுடன் அவர்களுக்கு தொடர்பு இருப்பதாக எந்த விவரங்களும் இதுவரை தெரியவில்லை.
 

மேலும் தீவிரவாத முகாம்கள் இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ள 22  இடங்களில் ஆய்வு மேற்கொண்டோம். ஆனால் அந்த இடங்களில் தீவிரவாத முகாம்கள் எதுவும் இல்லை. இந்தியா இந்த இடங்களுக்கு சென்று பார்வையிட வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தால் அவர்கள் செல்ல பாகிஸ்தான் அனுமதி அளிக்கும். இந்தியாவிற்கு ஒத்துழைப்பு தருவதில் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம் என அந்த அறிக்கையில் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. மேலும் பால்கோட் தாக்குதல் தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட ஆய்வு விவரங்களையும் இந்தியாவிடம் பாகிஸ்தான் வழங்கியுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்