Skip to main content

“2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அவசரப்பட வேண்டாம்” - ரிசர்வ் வங்கி கவர்னர்

Published on 22/05/2023 | Edited on 22/05/2023

 

"No rush to change Rs 2000 notes says Reserve Bank Governor

 

2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அவசரப்பட வேண்டாம்  என ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார்.

 

2000 ரூபாய் நோட்டுகள் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் செல்லாது என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் படிப்படியாகத் திரும்பப் பெறப்படும். டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து செப். 30 ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. மேலும் 2000 ரூபாய் நோட்டுகளை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது

 

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து புதிதாக 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது. மேலும் நாட்டில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என பாஜக அரசு தெரிவித்தது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனர். இந்த நிலையில் அக்டோபர் முதல் 2000 ரூபாய் நோட்டும் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே மக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

 

இந்த நிலையில் மக்கள் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அவசரம் காட்ட வேண்டாம் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகப் பேசிய அவர், “2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் இறுதிவரை புழக்கத்தில் இருக்கும். அதனால் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் அவசரப்பட வேண்டாம். இன்னும் 4 மாதம் அவகாசம் உள்ளது. தினமும் எத்தனை 2000 ரூபாய் நோட்டுகள் மாற்றப்படுகிறது என்று வங்கிகள் ரிசர்வ் வங்கிக்குத் தெரிவிக்க வேண்டும். பண நிர்வாகத்தின் ஒரு பகுதியாகவே 2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறப்படுகிறது. வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் நோட்டுகளை மாற்றவும் போதிய ஏற்பாடுகள் செய்யப்படும். 2000 ரூபாய் நோட்டுகள் மாற்றம் தொடர்பாக வங்கிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளோம். அதில் நோட்டுகளை மாற்ற வரும் மக்களுக்குக் காத்திருப்பதற்கான பந்தல்கள், குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகளை ஏற்பாடு செய்ய உத்தரவிட்டுள்ளோம்” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்