Skip to main content

பாஜகவுடன் கூட்டணி; முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் நிதிஷ்குமார்?

Published on 27/01/2024 | Edited on 27/01/2024
Nitish Kumar is planning to form an alliance with the BJP in Bihar

பீகார் மாநிலத்தில் பாஜகவுடன் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கூட்டணி அமைத்து நிதிஷ் குமார் தலைமையில் ஆட்சி அமைந்தது. ஆனால் அதன்பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாஜகவுடன் கூட்டணியை முறித்த நிதிஷ்குமார், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளடங்கிய மகா கூட்டணியை அமைத்து மீண்டும் நிதிஷ்குமார் முதல்வராகப் பதவி வகித்து வருகிறார். துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில்தான் ஆளும் கட்சி கூட்டணிக்குள் சில முரண்பாடு இருப்பதாகப் பேசப்பட்டு வந்தது. மேலும் நிதிஷ்குமார் மகா கூட்டணியிலிருந்து விலகி பாஜகவுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்த சூழலில் குடியரசு தின விழாவையொட்டி ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் நிதிஷ்குமார் மட்டுமே பங்கேற்றிருந்தார். துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பங்கேற்கவில்லை. கூட்டணிக்குள் ஏற்பட்ட பிளவு காரணமாகத்தான் தேஜஸ்வி பங்கேற்கவில்லை என்று பலரும் பேசி வந்தனர். தேஜஸ்வி யாதவ் தேநீர் விருந்தில் பங்கேற்காதது குறித்து முதல்வர் நிதிஷ்குமாரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்ப, யார் வரவில்லையோ அவர்களிடம் தான் இது குறித்து கேட்க வேண்டும் என்று பதிலளித்தார்.  ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பாக நாங்கள் மகா கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் தான் நிதிஷ்குமார் இன்றோ அல்லது நாளையோ ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு, பின்பு அடுத்த நாளே பாஜக கூட்டணியுடன் இணைந்து முதல்வராக மீண்டும் பதவி ஏற்பார் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது. நிதிஷ்குமார் பாஜகவுடன் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அதில் பீகாரின் முதல்வர் தான் தான் என்று நிபந்தனை வைத்ததாகவும், அதற்கு பாஜக ஒப்புக்கொண்டு மாநிலத்தில் இரண்டு துணை முதல்வர்கள் மற்றும் சபாநாயகர் பதவி இந்த மூன்றையும் தங்களுக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்