Skip to main content

"பிரசாந்த் கிஷோரை சந்தித்த பிறகு நம்பிக்கை அதிகரித்தது" - திரிணாமூலுக்கு தாவிய காங். முன்னாள் முதல்வர்!

Published on 25/11/2021 | Edited on 25/11/2021

 

MEGHALAYA

 

திரிணாமூல் காங்கிரஸ், தேசிய அரசியலில் தடம் பதிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதனையொட்டி பல்வேறு மாநிலங்களிலும் கட்சியின் கிளைகளை விரிவுபடுத்தும் முயற்சிகளில் திரிணாமூல் காங்கிரஸ் இறங்கியுள்ளது.

 

இதனையொட்டி பல்வேறு மாநிலங்களில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களைத் திரிணாமூல் காங்கிரஸ் தங்கள் பக்கம் இழுத்துவருகிறது. இவ்வாறு திரிணாமூல் காங்கிரஸில் இணைபவர்களில் பெரும்பாலானோர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால், இரு கட்சிகளிடையே மோதல் வெடித்துள்ளது.

 

இந்தநிலையில், மேகாலயா மாநிலத்தில் உள்ள 17 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் 11பேர், அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் எம்.எல்.ஏவுமான முகுல் சங்மாவின் தலைமையில் நேற்று (24.11.2021) இரவு திரிணாமூல் காங்கிரசுக்குத் தாவியுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

 

இந்தநிலையில் காங்கிரஸ் முன்னாள் முதல்வர் முகுல் சங்மா, தானும் மற்ற 11 எம்.எல்.ஏக்களும் திரிணாமூல் காங்கிரஸில் இணைந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர், "ஒரு வலுவான மாற்று அரசியல் கட்சியின் தேவை இந்திய அளவில் உள்ளது. இந்திய தேசிய காங்கிரஸ் நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியாக கடமையாற்றுவதற்கான அழைப்புக்கு பதிலளிக்கத் தவறி வருகிறது. எனவே மாநிலம், பிராந்தியம் மற்றும் தேசத்தை கவனித்துக்கொள்வதற்கு வாய்ப்புள்ள ஒரு அரசியல் கட்சியை கண்டுபிடிப்பதற்கான எங்கள் தேடல் இந்த முடிவுக்கு கொண்டுவந்துள்ளது" எனக் கூறியுள்ளார். மேலும் அவர், பிரசாந்த் கிஷோரை சந்தித்த பிறகு திரிணாமூல் காங்கிரஸின் சக்தி மீதான நம்பிக்கை அதிகரித்ததாகக் கூறியுள்ளார்.

 

இந்திய அரசியலமைப்பு சட்டப்படி, மூன்றில் இரண்டு பங்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வேறு கட்சிக்கு மாறினால், அவர்களை கட்சி தாவல் தடை சட்டத்தின்படி தகுதி நீக்கம் செய்ய முடியாது. எனவே தற்போது கட்சி மாறியுள்ள 12 பேரும் திரிணாமூல் எம்.எல்.ஏக்களாக தொடருவார்கள். இதன்மூலம் திரிணாமூல் காங்கிரஸ் மேகாலயாவின் முதன்மை எதிர்க்கட்சியாக மாறுகிறது.  

 

 

சார்ந்த செய்திகள்