பா.ஜ.க.வின் மூத்த தலைவர் டாக்டர் மாணிக் சாஹா திரிபுரா மாநிலத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.
திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த பிப்லப் குமார் தேவ் தன்னிச்சையாக செயல்படுவதாக, பா.ஜ.க.வைச் சேர்ந்த 13 சட்டமன்ற உறுப்பினர்கள் புகார் தெரிவித்த நிலையில், அவர் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதையடுத்து, பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், திரிபுரா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக டாக்டர் மாணிக் சாஹா, ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, ராஜ்பவனுக்கு சென்ற டாக்டர் மாணிக் சாஹா, ஆளுநரை நேரில் சந்தித்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை வழங்கி ஆட்சி அமைக்க உரிமைக் கோரினார்.
இந்த நிலையில், இன்று (15/05/2022) ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சராக டாக்டர் மாணிக் சாஹா பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அம்மாநில ஆளுநர் சத்யதேவ் நாராயண், பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
காங்கிரஸ் கட்சியின் இருந்த மாணிக் சாஹா, கடந்த 2016- ஆம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்தார். இவர் தற்போது பா.ஜ.க.வின் திரிபுரா மாநிலத்தின் தலைவராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.