Skip to main content

பெரும்பான்மையா? தொங்கு சட்டசபையா? - கர்நாடகாவில் இன்று வாக்கு எண்ணிக்கை

Published on 13/05/2023 | Edited on 13/05/2023

 

 The majority? A hung assembly?-Today's vote count

 

கர்நாடகாவில் 224 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கு மே 10, 2023 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. ஆட்சியிலிருக்கும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மும்முனை போட்டியில் உள்ளன.

 

தற்போதைய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஷிகோவன் தொகுதியிலும், பாஜக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மகன் விஜயேந்திரா பாஜக சார்பில் ஷிகாரிபுரா தொகுதியிலும், வருணா தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சித்தராமையாவும், கனகபுரா தொகுதியில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரும், கல்புர்கி மாவட்டம் சித்தாபுரா தொகுதியில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மகன் பிரியங்க் கார்கேவும், கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி சன்னப்பட்டினா தொகுதியிலும், எச்.டி.தேவகவுடா பேரன் நிகில் குமாரசாமி ராமநகரா தொகுதியிலும் போட்டியிட்டுள்ளனர்.

 

ஆண் வேட்பாளர்கள் 2430 பேர், பெண் வேட்பாளர்கள் 185 பேர் என மொத்தம் 2,615 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். மொத்தமுள்ள 224 தொகுதிகளில் பாஜக 224 தொகுதிகளிலும், காங்கிரஸ் 223 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 207 தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளன .நடந்து முடிந்த தேர்தலில் 73.19 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.

 

இந்நிலையில் கடந்த பத்தாம் தேதி பதிவான வாக்குகள் இன்று காலை 8:00 மணி முதல் எண்ணப்பட இருக்கிறது. தபால் வாக்குகள் 75,603 மற்றும் மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் என அனைத்தும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தேர்தலுக்குப் பிந்தைய சில கருத்துக்கணிப்புகளில் தொங்கு சட்டப்பேரவை அமைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியான நிலையில் பாஜக மற்றும் காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்காவிடில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்