Skip to main content

உ.பி வன்முறை: ராகுல் காந்தி குழுவிற்கு அனுமதி மறுப்பு - மகன் காரில் இல்லை என மத்திய அமைச்சர் விளக்கம்!

Published on 06/10/2021 | Edited on 06/10/2021

 

rahul gandhi

 

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்றனர். அப்போது ஆஷிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் இறந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் ஆஷிஸ் மிஸ்ரா, விவசாயி ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் பத்திரிகையாளர் உட்பட மேலும் ஐந்து பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து லக்கிம்பூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த மாவட்டத்தில் இணையச் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆஷிஸ் மிஸ்ரா மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இந்தநிலையில் வன்முறை நிகழ்ந்த லக்கிம்பூருக்குச் செல்ல முயன்ற பிரியங்கா காந்தி உத்தரப்பிரதேச காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது பொது அமைதிக்கு ஊறு விளைவித்ததாக நேற்று (05.10.2021) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தியை விடுவிக்கக் கோரி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இன்றைக்குள் பிரியங்கா காந்தியை விடுவிக்காவிட்டால் பஞ்சாப் காங்கிரஸ் லக்கிம்பூர் கெரியை நோக்கி அணிவகுக்கும் என பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியை அண்மையில் ராஜினாமா செய்த நவ்ஜோத் சித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

இந்தச் சூழலில் பிரியங்கா காந்தி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சீதாபூரிலும் இணைய சேவை இரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள தனது மனைவியை சந்திக்கச் சென்ற ராபர்ட் வதேராவை உத்தரப்பிரதேச காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதற்கிடையே, ராகுல் காந்தி தலைமையில் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல், பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சன்னி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகியோர் அடங்கிய குழு வன்முறை நடைபெற்ற லக்கிம்பூருக்குச் செல்ல முடிவெடுத்து அதற்காக உத்தரப்பிரதேச அரசிடம் அனுமதி கோரினர். ஆனால் ராகுல் காந்தி தலைமையிலான குழுவிற்கு உத்தரப்பிரதேச அரசு அனுமதி மறுத்துவிட்டது.

 

இதற்கிடையே மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா, விவசாயிகள் மீது மோதிய காரில் தனது மகன் இல்லை என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், "எனது மகன் காரில் இல்லை. கார் தாக்கப்பட்டதில் டிரைவர் காயமடைந்தார். கார் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த சிலர் மீது ஏறியது. உயிரிழந்தவர்களுக்காக எனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளேன். இந்த சம்பவத்தில் நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும்" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்