உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்றனர். அப்போது ஆஷிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் இறந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் ஆஷிஸ் மிஸ்ரா, விவசாயி ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் பத்திரிகையாளர் உட்பட மேலும் நான்கு பேர் உயிரிழந்தனர்.
இந்த வன்முறை தொடர்பாக ஆஷிஸ் மிஸ்ரா மற்றும் அவரது ஆதரவாளர்கள் என 14 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஆஷிஸ் மிஸ்ராவின் ஆதரவாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக ஆஷிஷ் மிஸ்ராவிடம் உ.பி காவல்துறையினர் 12 மணி நேரம் தீவிர விசாரணை நடத்திய நிலையில், நள்ளிரவில் அவர் கைது செய்யப்பட்டார். நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பு காரணமாக உ.பி அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.