Skip to main content

இந்தியாவை அதிரவைத்த ஒற்றைப் பெண்ணின் போர்க்குரல்! 

Published on 16/02/2022 | Edited on 16/02/2022

 

Karnataka Hijab issue

 

கர்நாடகாவிலுள்ள ப்ரீ யூனிவர்சிட்டி கல்லூரிகளில் படிக்கும் இஸ்லாமிய மாணவிகள், ஹிஜாப் உடையை அணிவதற்கு கர்நாடக கல்வித்துறை திடீரெனத் தடை விதித்தது. அதையடுத்து, உடுப்பியிலுள்ள மகாத்மா காந்தி நினைவு கல்லூரியில் ஹிஜாப் அணிந்த இஸ்லாமிய மாணவிகளைக் கல்லூரிக்குள் விட மறுத்து வெளியிலேயே நிறுத்தியது கல்லூரி நிர்வாகம். அரசியல் சாசனம் கொடுத்த உரிமைப்படி எங்களை அனுமதிக்க வேண்டுமென்று 6 மாணவிகள் எதிர்ப்புத் தெரிவித்து தொடர்ந்து போராடினர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியர், “சீக்கியர்கள் டர்பன் அணியவும், கிறிஸ்தவர்கள் ஜெபமாலை அணியவும், இந்துக்கள் பூணூல் அணியவும், இஸ்லாமியர்கள் ஹிஜாப் அணியவும் அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது. எங்களை மட்டும் தடுப்பது ஏன்?” என்று கேள்வியெழுப்பினார்கள். இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தின்மீது கர்நாடக உயர் நீதிமன்றத்திலும், தேசிய மனித உரிமை ஆணையத்திலும் மாணவிகள் முறையிட்டனர்.

 

இச்சம்பவத்துக்கு ராகுல் காந்தி, “கல்வியின் பாதையில் ஹிஜாப்புக்கு இடையூறு செய்வதன் மூலம், நம் நாட்டு மகள்களின் எதிர்காலத்தைத் திருடிக்கொண்டிருக்கிறோம். கல்வியின் கடவுளான சரஸ்வதி, அனைவருக்கும் பொதுவாகவே அறிவைத் தந்திருக்கிறார். எந்த பேதமும் பார்க்கவில்லை" என்று கூறினார். இவ்விவகாரத்தில் மாணவிகளுக்கு ஆதரவாக பிரியங்கா காந்தி, "பிகினியோ, பர்தாவோ, ஜீன்ஸ் பேண்டோ, பெண்கள் எதை அணிய வேண்டும் என்பது அவர்கள் உரிமை. இவை இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதி அளித்த உரிமைகள். பெண்களைத் துன்புறுத்துவதை நிறுத்துங்கள்" என்று ட்விட்டரில் கூறியுள்ளார்.

 

இஸ்லாமிய மாணவிகளுக்கெதிராக, உடுப்பி மாவட்டம் குண்டாப்பூர் அரசு கல்லூரியில் இந்துத்துவா அமைப்பினர், கல்லூரி மாணவர்களுக்கு காவித்துண்டு அணிவித்து மதவாத அரசியலைத் தூண்டிவிட்டனர். இந்த விவகாரத்தில் மதவெறி பற்றவைக்கப்பட்டதில், சிவமோகாவிலுள்ள ஒரு கல்லூரியின் தேசியக் கொடி ஏற்றுவதற்கான கம்பத்தில் காவிக்கொடியை ஒரு மாணவன் ஏற்ற, மற்ற மாணவர்கள் ஆரவாரத்துடன் ஜெய்ஸ்ரீராம் கோஷமிட்டனர். காவிக் கொடியை ஏற்றிய மாணவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 

இந்நிலையில்தான், மாண்டியாவிலுள்ள ஒரு கல்லூரிக்கு, முஸ்கான் பேகம் என்ற இஸ்லாமிய மாணவி, பர்தா அணிந்துகொண்டு வந்தார். உடனே அவரை வழிமறித்து சூழ்ந்த காவித்துண்டு இந்துத்துவா மாணவர்கள், 'ஜெய்ஸ்ரீராம்' என்று உரக்கக் கோஷமிட்டபடி, பர்தாவோடு கல்லூரிக்குள் செல்லக்கூடாதென்று மிரட்ட, அப்பெண்ணோ, உடை அணிவது என் உரிமை என தைரியமாகச் சொன்னதுடன், ஜெய்ஸ்ரீராம் குரல்களுக்கு மாற்றாக 'அல்லாஹூ அக்பர்' என்று குரலெழுப்பியபடி வகுப்பறை நோக்கிச் சென்றார். அந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக, அவரது முழக்கம், மத வேறுபாடு கடந்து அனைவராலும் ஹேஷ் டேக்காகப் பகிரப்பட்டது. காவி தலைப்பாகை அணிந்து போராடிய மாணவர்கள், நேரம் முடிந்ததும், அதை வாடகைக்கு எடுத்தவர்களிடம் திருப்பிக் கொடுக்கும் வீடியோவும் பரவியது.

 

காவி - ஹிஜாப் விவகாரம் பெரிதாகவும், பள்ளி கல்லூரிகளுக்கு 3 நாள் விடுமுறையை கர்நாடக அரசு அறிவித்தது. இந்நிலையில், ஹிஜாப் அணிவதற்கு உரிமை உண்டு என்று உத்தரவிட கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மாணவிகள் தொடர்ந்த வழக்கு விசாரணையில், மாணவிகள் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் தேவதத் காமத், கர்நாடக அரசின் இந்துத்துவா நிலைப்பாட்டைக் கடுமையாகச் சாடினார்.

 

"ஹிஜாப் அணிந்த சில மாணவர்களை பள்ளிக்குள் அனுமதித்தாலும், அவர்களை வகுப்பறையில் தனியாக அமர வைத்தது நவீன தீண்டாமை. நான் ஒரு பிராமின். நான் என் பள்ளிக்கு நாமம் அணிந்து சென்றுள்ளேன். தற்போது என் மகன் நாமம் அணிந்து செல்கிறான். அவனை யாரும் தடுக்கவில்லை. அப்படி இருக்கும்போது ஹிஜாப் அணிவதை பிரச்சனையாக்குவது ஏன்?" என்ற அவரது உணர்வுப்பூர்வமான கேள்விகளுக்கு கர்நாடக அரசுத் தரப்பு வழக்கறிஞர் பதிலளிக்க முடியாமல் திணறினார். இவ்வழக்கு விசாரணையில், "எனது தனிப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்தாமல் அரசியல் சாசனப்படி நடந்து கொள்வேன்" என்று குறிப்பிட்ட நீதிபதி கிருஷ்ணா தீட்சித், வழக்கை கூடுதல் பெஞ்சுக்கு மாற்றி உத்தரவிட்டார். ஹிஜாப் அனுமதி மறுப்புக்கு இடைக் காலத் தடை விதிக்கப்படாததால், பதற்றம் தொடர்ந்தது..

 

பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு பதவிக்கு வந்ததிலிருந்தே. பசு வதையென்று இஸ்லாமியர்கள் மீது தாக்குதல், சி.ஏ.ஏ., குடியுரிமைச் சட்டத் திருத்தம், டெல்லியில் இஸ்லாமியர்கள் படுகொலை என்று இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல், இஸ்லாமிய மாணவிகளுக்கு எதிரான வன்முறை என்று தொடர்வதும், பிரதமர் மோடியின் பலத்த மவுனமும், மத நல்லிணக்கவாதிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்