Skip to main content

கர்நாடக முதல்வர் சித்தராமையா போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Karnataka Chief Minister Siddaramaiah struggle

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய வறட்சி நிவாரணம் வழங்காததை கண்டித்து அம்மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பெங்களூரு விதான சவுதாவில் உள்ள காந்தி சிலை முன்பு இன்று (23.04.2024) போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசு மாற்றாந்தாய் போக்குடன் நடத்துகிறது என கார்நாடக அரசு சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இது குறித்து கர்நாடக மாநில முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையா கூறுகையில், “காங்கிரஸ் கட்சி சார்பில், மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தினோம். நரேந்திர மோடியும், அமித்ஷாவும் கர்நாடக விவசாயிகளை வெறுக்கிறார்கள். கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி மத்திய அரசுக்கு வறட்சி குறித்து குறிப்பாணை (memorandum) கொடுத்தோம். பிறகு மத்திய குழு வந்தது.  அதன் பின்னர் மாநிலத்தின் 223 தாலுகாக்களில் வறட்சி நிலவி வருவதை அமித் ஷா ஆய்வு செய்தார். இதுவரை காலதாமதமாக விவசாயிகளுக்கு 650 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியுள்ளது. கர்நாடகாவுக்கு உரிய நிவாரணம் வழங்காததற்கு நிர்மலா சீதாராமனும், நரேந்திர மோடியும் தான் காரணம்” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்