Skip to main content

ஜெயலலிதாவின் சொத்துகள் ஏலம் விடும் விவகாரம்; ஜெ. தீபா மனு தள்ளுபடி

Published on 31/08/2023 | Edited on 31/08/2023

 

Jayalalithaa property auction issue Dismissal of petition J.Deepa 

 

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது தொடரப்பட்டிருந்த சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து சொத்துகளையும் உடனடியாக ஏலம் விட வேண்டும் எனக் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஆர்.டி.ஐ ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி பெங்களூர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்திருந்தார்.

 

அந்த வழக்கின்படி, பெங்களூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சொத்துகளை ஏலம் விடுவதற்கான சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞரை கர்நாடக அரசு நியமித்திருந்தது. அதன்படி சொத்துகளை ஏலம் விடும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு கடந்த 28 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் சார்பில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து வகையான சொத்துகளின் பட்டியல் நீதிமன்றத்திலும் வழங்கப்பட்டது.

 

இந்நிலையில் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் உள்ள சொத்துகளை ஏலம் விடுவதை நிறுத்தி வைக்கக் கோரிய தீபாவின் மனு இன்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெ. தீபாவின் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே சமயம் ஏலத்தில் உள்ள 65 பினாமி நிறுவனங்களின் 65 அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் தற்போதைய மதிப்பை 35 நாட்களில் கணக்கிட்டு தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்