Skip to main content

ஜம்மு விமானப்படைத்தளம் மீதான தாக்குதல்: பாகிஸ்தானிலிருந்து ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம்!

Published on 28/06/2021 | Edited on 28/06/2021

 

jammu kashmir

 

ஜம்முவிலுள்ள இந்திய விமானப் படைத் தளத்தில் நேற்று (27.06.2021) அதிகாலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், இரண்டு விமானப்படை அதிகாரிகள் காயமடைந்தனர். இந்தநிலையில், இந்த தாக்குதலில் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில், தீவிரவாதிகள் ட்ரோன்கள் மூலம் நடத்திய முதல் தாக்குதல் இது என கருதப்படுகிறது.

 

ஐந்து நிமிட இடைவெளியில் இரண்டு ட்ரோன்கள், மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்களை (ஐ.இ.டி) வீசி தாக்குதலில் ஈடுபட்டுவிட்டு திரும்பச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடந்த ஜம்மு விமானப்படைத் தளம், இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லையிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஏற்கனவே பாகிஸ்தானிலிருந்து ட்ரோன்கள் மூலம் இந்தியாவிற்குள் ஆயுதங்களை அனுப்ப முயற்சி நடைபெற்றுள்ளதால், தாக்குதல் நடத்திய ட்ரோன்கள் பாகிஸ்தானிலிருந்து வந்திருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.

 

அதேநேரத்தில் இந்திய எல்லைக்குள் இருந்துகொண்டே ட்ரோன்களை அனுப்பி தாக்குதல் நடத்தப்பட்டதற்கான வாய்ப்பையும் மறுப்பதற்கில்லை எனவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அண்மையில் பிரதமர் தலைமையில் கூட்டம் நடைபெற்ற நிலையில், விமானப் படைத்தளத்தில் தாக்குதல் நடைபெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இந்த தாக்குதல் தொடர்பான விசாரணை தேசிய புலனாய்வு முகமையிடம் அதிகாரப்பூர்வமாக அளிக்கப்படும் என கருதப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்