தலித்துகளுக்கு எதிரான சமூக அநீதி மற்றும் மோசமான சூழல் நிலவுவதுதான், அவர்கள் புத்த மதத்தைத் தழுவுவதற்கான காரணம் என பாஜக எம்.எல்.ஏ. உதித் ராஜ் பேசியுள்ளார்.
2016, ஜூலை 11-ஆம் தேதி, குஜராத் மாநிலம் உனா தாலுகாவின் மோட்டா சமாதியாலா கிராமத்தில் நான்கு பேர் இறந்த பசுவொன்றை, தோலுரித்து மாமிசம் வேறு, தோல்வேறு என பிரித்தபோது, திடீரென அங்குவந்த பசு குண்டர்கள் அவர்களை கடுமையாக தாக்கினர். இது குஜராத் மாநிலத்தில் உள்ள தலித்துகள் இடையே மிகப்பெரிய கொந்தளிப்பையும், மாபெரும் தலித் புரட்சியையும் ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் இதுவரை தண்டிக்கப்படாத நிலையில், குஜராத் மாநிலம் உனாவில் பசு குண்டர்களால் தாக்கப்பட்டவர்கள் உட்பட, 450 பேர் நேற்று புத்தமதத்தைத் தழுவினர். ‘இந்து மதத்தைக் கைவிடுவதால் எங்கள் வாழ்க்கையில் எந்த மாற்றமும் வந்துவிடப்போவதில்லை என தெரியும். ஆனாலும், எங்களை தாக்கியும் வதைத்தும் விலங்குகளைப் போல் நடத்தும், இந்து மதத்தைச் சேர்ந்தவர்களின் கடவுள்களின்முன் இனியும் பிரார்த்தனை செய்ய எங்களால் முடியாது’ என அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள பாஜக எம்.எல்.ஏ. உதித் ராஜ், ‘தலித்துகளுக்கு எதிரான சமூக அநீதிதான் அதற்கு முக்கியக் காரணம். மீசை வைத்த காரணத்தினால் கூட இங்கு தலித்துகள் தாக்கப்படுகின்றனர். அவர்களுக்கு மாற்றுவழி ஏதேனும் இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. இங்கு நிலவும் மோசமான சூழலின் வெளிப்பாடு’ என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.