Skip to main content

பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது!

Published on 21/05/2019 | Edited on 21/05/2019

பூமி கண்காணிப்பிற்கான ரீசாட் செயற்கைக் கோளைச் சுமந்த படி இந்தியாவின் பிஎஸ்எல்சி- சி-46 (PSLV C-46)ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது. பூமியைக் கண்காணிப்பதற்கான ரீசாட் 2பி ஆர்1 (RISAT-2B) என்ற புதிய செயற்கைக் கோளை இஸ்ரோ நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட் மூலம் நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து நாளை காலை 5 மணி 27 நிமிடங்களுக்கு இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த செயற்கைக் கோளின் உதவியால் இரவிலும், பகலிலும் மட்டுமின்றி வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் நேரத்திலும் பூமியைத் தெளிவாக படம் பிடிக்க முடியும். இதில் அதிநவீன புகைப்பட சாதனம் இணைக்கப்பட்டுள்ளது.

 

pslv

 

இதன் மூலம் ரேடார் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பூமியைத் தெளிவாகப் படம் பிடித்து கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்ப முடியும். இந்தியாவில் முதன் முறையாக  ராக்கெட் ஏவப்படுவதைப் பார்க்க ஏவுதளத்தில் பொதுமக்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் இஸ்ரோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்த பின்னர் தகுந்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். விண்வெளி தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்வதற்காக பொதுமக்கள் ஏவுதளத்தில் அனுமதிக்கப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

 

PSLV

 

மேலும் ராக்கெட்  ஏவப்படுவதை நேரில் பார்க்க விரும்புவோர்கள் இணையதள முகவரி : https://www.shar.gov.in/VSCREGISTRATION/index.jsp சென்று பதிவு செய்து கொள்ளலாம் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இந்த செயற்கை கோளை தொடர்ந்து சந்திராயன் -2ஐ விண்கலத்தை ஜூலை மாதத்தில் விண்ணில் செலுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

‘குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி பூங்கா’ - தமிழக அரசு அறிவிப்பு!

Published on 17/05/2024 | Edited on 17/05/2024
Space Park in Kulasekaranpattinam' - Tamil Nadu Government Announcement

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO - இஸ்ரோ) தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ரூ. 950 கோடி மதிப்பீட்டில் 2 ஆயிரத்து 233 ஏக்கர் பரப்பளவில் இரண்டாவது விண்வெளி நிலையத்தை நிறுவுகிறது. இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவின் விண்வெளி குறித்த ஆய்வு திறன்களை மேம்படுத்துவதையும் செயற்கைக்கோள் ஏவுதலை எளிதாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (TIDCO - டிட்கோ) விண்வெளி தொடர்பான முயற்சிகளில் மாநிலத்தின் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் வகையில் இஸ்ரோவின் துணை நிறுவனமான இன்ஸ்பேஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU - எம்.ஓ.யு.) கையெழுத்திட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது குறித்து டிட்கோ சார்பில் தெரிவிக்கையில், “இந்த முயற்சியானது விண்வெளித் துறையில் 100% அந்நிய நேரடி முதலீடு என்ற சமீபத்திய அறிவிப்பை சாத்தியப்படுத்தியுள்ளது. இது உலக முதலீட்டாளர்களை குறிப்பாக தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி துறையில் பங்கேற்க வைக்கும் முயற்சி ஆகும். இந்த பூங்கா விண்வெளி ஆராய்ச்சி, அதன் மேம்பாடு மற்றும் தொழில்துறை ஒத்துழைப்புக்கான மையமாக செயல்படும். இது உலகளாவிய விண்வெளி அரங்கில் தமிழகத்தின் நிலையை மேம்படுத்தும். இதன் மூலம் தேசிய பாதுகாப்பு மற்றும் உலகளாவிய விண்வெளி தொழில்நுட்பம் ஆகிய இரண்டிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்து இந்தியாவின் ஆற்றல்மிக்க மற்றும் முக்கிய மாநிலமாக தமிழகம் உருவெடுத்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

நிலவின் தென்துருவத்தில் தண்ணீர்; உறுதி செய்த இஸ்ரோ!

Published on 01/05/2024 | Edited on 01/05/2024
moon

இந்தியா சார்பில் நிலவின் தென் துருவத்தை ஆராயக் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3 நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு நிலவுக்கு மிக அருகில் சென்றதைத் தொடர்ந்து கடந்த வருடம் ஆகஸ்ட் 23ம் தேதி மாலை 6.2 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து லேண்டரில் இருந்த ரோவர் வெளியே வந்து நிலவில் ஆய்வுகளை செய்து வருகிறது.

நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக வெற்றிகரமாக சந்திரயான்- 3 தரை இயக்கியதால் உலக நாடுகள் அளவில் கவனிக்கத்தக்க இடம் பெற்றது இந்தியாவும் இஸ்ரோ நிறுவனமும். இந்நிலையில் தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளை  சந்திரயான்- 3  நிலவில் மேற்கொண்டு வரும் நிலையில் நிலவின் தென் துருவப் பகுதியில் தண்ணீர் இருப்பதை தற்போது இஸ்ரோ உறுதி செய்துள்ளது. சந்திரயான்-3 அனுப்பிய தகவல்களை ஆராய்ச்சி செய்ததில் நிலவின் தென் துருவத்தில் ஐந்து முதல் எட்டு மீட்டர் ஆழத்தில் தண்ணீர் பனிக்கட்டிகளாக உறைந்து இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இஸ்ரோவின் ஸ்பேஸ் அப்ளிகேஷன் சென்டர் பிரிவு, ஐஐடி கான்பூர், கலிபோர்னியா பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

நிலவில் தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அடுத்த கட்டமாக சந்திரயான்- 4 திட்டத்தில் தென் துருவத்தில் தரைப்பகுதியை துளையிட்டு ஆராய்ச்சி செய்ய இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.