ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் மீது தாக்குதல் நடத்த நேற்று காலை உத்தரவிட்டார். அதனைதொடர்ந்து ரஷ்யா, உக்ரைன் மீது தொடர் தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. மேலும் உக்ரைன் தலைநகர் கீவ்-வில் நுழைந்து முன்னேறி வருகிறது. இதற்கிடையே ரஷ்யா, உக்ரைன் ராணுவம் ஆயுதங்களை கீழே போட்டால் உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என அறிவித்துள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் ரஷ்யா சென்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், புதினை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது புதினிடம், இம்ரான் கான் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை எழுப்பியுள்ளார். புதின் - இம்ரான் கான் சந்திப்பு குறித்து பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் இது தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானின் அறிக்கையில், “இந்தியாவால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு மற்றும் காஷ்மீரில் மனித உரிமைகளின் நிலையை பிரதமர் (புதினிடம்) எடுத்துரைத்தார். மேலும் ஜம்மு காஷ்மீர் பிரச்சனையை அமைதியான முறையில் தீர்க்க வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார்” என கூறப்பட்டுள்ளது.