கர்நாடகாவைச் சேர்ந்த 15வயது சிறுமி பிரத்யக்ஷா கிராமங்களுக்கு சென்று கழிவறை குறித்து தெருக்கூத்து நாடகம் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு செய்துவருகிறார். இவர் ஒரு குழந்தை நட்சத்திரமாகும். "சண்டாஸ்" என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் ஒரு சில படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது அவரது தோழிகள் அனைவரும் கோடைவிடுமுறையை கழித்து வரும் சூழலில் இவர் மட்டும் மக்களின் நலனை கருத்தில்கொண்டு இவ்வாறு செய்து வருகிறார்.
இதுகுறித்து பிரத்யக்ஷா கூறுகையில், "நான் ஆறு வயதிலிருந்து மேடை நாடகங்களில் நடித்து வருகின்றேன். கோபால் கிராமத்தில் படப்பிடிப்பில் இருந்தபொழுது அங்குள்ள கிராம மக்கள் கழிவறையை பயன்படுத்தாமல், வெளிப்புறத்தை பயன்படுத்தினர். பெண்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்றெல்லாம் நான் சிந்திக்க ஆரம்பித்து விட்டேன். இதற்கு என்ன வழி என்று யோசிக்கையில் தெருக்கூத்து நாடகங்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு செய்யலாம் என்ற முடிவெடுத்தேன். இதற்கு என் குடும்பத்தாரும் ஆதரவு தெரிவித்தனர். 100 க்கும் மேற்பட்ட தெருக்கூத்து நாடகங்களை கோபால், கன்னபுரா, சிக்காமங்களூர் மேலும் பல கிராமங்களில் போட்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம்".
பிரத்யக்ஷாவின் தந்தை இவர் செயல் குறித்து கூறியது, " என் மகளை நினைக்கும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது".