Skip to main content

"அவரின் உயிலுக்கு எதிரானது" - குஜராத் அரசின் திட்டத்திற்கு எதிராக காந்தியின் கொள்ளுப்பேரன் வழக்கு!

Published on 30/10/2021 | Edited on 30/10/2021

 

SABAMARMATI ASHRAM

 

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைந்துள்ள சபர்மதி ஆசிரமம், பழம்பெருமை வாய்ந்தது. மகாத்மா காந்தி 1917 முதல் 1930 வரை சுமார் 13 ஆண்டுகள் இந்த ஆசிரமத்தில்தான் வாழ்ந்தார். இந்நிலையில், இந்த ஆசிரமத்தை உலகத்தரம் வாய்ந்த நினைவிடமாக மேம்படுத்த 1,200 கோடியில் திட்டம் ஒன்றை குஜராத் அரசு அறிவித்துள்ளது.

 

இந்தத் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், சுதந்திர போராட்ட தியாகிகள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.  ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், "சபர்மதி ஆசிரமத்தை இடித்து அருங்காட்சியகத்தை அமைக்கும் குஜராத் அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. மேலும், இது தேவையற்றது. பார்வையாளர்கள் அந்த இடத்தின் எளிமையையும், தத்துவங்களையும் போற்றுவார்கள். அதனால்தான் அது ஆசிரமம் என அழைக்கப்படுகிறது. அது அருங்காட்சியகம் என அழைக்கப்படுவதற்கான இடம் அல்ல. ஆசிரமத்தின் நல்லொழுக்கத்தையும், கண்ணியத்தையும் அழிப்பது தேசத் தந்தைக்கு செய்யும் அவமரியாதை. காந்திஜிக்கு தொடர்புடைய அனைத்தையும் மாற்ற வேண்டும் என்ற அரசியல் நோக்கத்தோடு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது" என கூறியிருந்தார்.

 

இந்தநிலையில், மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி, குஜராத் அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் "முன்மொழியப்பட்ட மறுவடிவமைப்பு திட்டம் மகாத்மா காந்தியின் தனிப்பட்ட விருப்பங்களுக்கும், உயிலுக்கும் முற்றிலும் எதிரானது. மேலும் அந்த திட்டம், இந்திய சுதந்திர போராட்டத்தின் புனித தலமாகவும், நினைவிடமாகவும் விளங்கும் இடத்தின் மதிப்பைக் குறைத்து, அதனை வணிக சுற்றுலாத்தலமாக மாற்றிவிடும்" என துஷார் காந்தி குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்