Skip to main content

சத்தீஸ்கர் அரசியலில் புயலை கிளப்பிய மோசடி வழக்கு! துபாயில் நடந்த கைது!

Published on 14/12/2023 | Edited on 14/12/2023
Fraud case that created a storm in Chhattisgarh politics! The arrest in Dubai!

சத்தீஸ்கரை சேர்ந்த சவுரப் சந்திரகர் அவரது நண்பர் ரவி உப்பால் இருவரும் சேர்ந்து மாகாதேவ் என்ற பெயரில் சூதாட்ட செயலியை உருவாக்கி அதை செயல்படுத்தி வந்தனர். இந்த செயலி தேர்தல் முடிவுகளை கணிப்பது முதல் வானிலை முன்னறிவிப்புகள் என பல்வேறு துறைகளில் நான்கு ஆண்டுகள் செயல்பட்டு வந்துள்ளது. இதில் கோடிக்கணக்கில் பண மோசடி நடந்திருப்பதாக புகார் எழுந்த நிலையில், அமலாக்கத்துறை செயலியின் செயல்பாடுகளை கண்காணிக்க, வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடத்த தொடங்கியது. 

இந்த மோசடி தொடர்பாக அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையில் ஐக்கிய அரபு அமீரகத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இந்த செயலி செயல்பட்டு வருவதும் 70-30 சதவீத விகிதத்தில் கிளைகளை நடத்தி வருபவர்களுக்கு லாப பங்கீடு கொடுக்கப்பட்டு வருவதாகவும் தெரியவந்தது. கடந்த செப்டம்பர் மாதம் கொல்கத்தா, போபால், மும்பை ஆகிய இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை 417 கோடி ரூபாய் பறிமுதல் செய்ததாக அறிவித்தது.

இதனை தொடர்ந்து, இந்த செயலியின் உரிமையாளர்களில் ஒருவரான சவுரப் சந்திரகரின் திருமணம் கடந்த பிப்ரவரியில் துபாயில் நடைபெற்றது. ரூ.200 கோடி செலவில் இந்த திருமணம் நடந்ததாக அமலாக்கத்துறையினரால் தெரிவிக்கப்பட்ட நிலையில், இதில் 17 பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அவர்களுக்கு ஹவாலா முறையில் பணம் அனுப்பப்பட்டதாகக் கூறியது. 

மேலும், இந்த செயலி மீதான சோதனைகளின் போது, கூரியர் நிறுவனத்துக்கு சொந்தமான கார் மற்றும் அதன் உரிமையாளர் வீடுகளில் பல கோடி ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது. அந்த சோதனையில் சிக்கிய ஆசிம் தாஸ் என்ற ஊழியரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதில், சத்தீஸ்கர் மாநில முதலமைச்சராக இருந்த பூபேஷ் பாகலுக்கு சூதாட்ட செயலி உரிமையாளர்கள் ரூ.508 கோடி கொடுத்ததாக திடுக்கிடும் வாக்குமூலம் அளித்தார். இது சத்தீஸ்கர் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்தியாவில் பல்வேறு விளையாட்டுகளின் பெயரில் சூதாட்டம் நடத்தி ரூ.6,000 கோடி வரை பணமோசடி நடந்திருப்பதாகக் கூறப்படும் இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்து, கடந்த அக்டோபர் மாதம் செயலியின் உரிமையாளர்களான இருவருக்கும் எதிராக சிறப்பு பணமோசடி தடுப்பு சட்ட நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து, இருவருக்கும் எதிராக ஜாமீனில் வெளியே வரமுடியாதபடி பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதையடுத்து, சூதாட்ட செயலியின் உரிமையாளர்கள் இருவரையும் பிடிக்க அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டது. அவர்கள் வெளிநாட்டில் பதுங்கி இருப்பதை தொடர்ந்து, அவர்களை பிடிக்க அமலாக்கத்துறை சர்வதேச போலீசாருக்கு கோரிக்கை விடுத்தது. அமலாக்கத்துறையின் கோரிக்கையின் அடிப்படையில், சர்வதேச போலீஸ் அவர்கள் இருவருக்கும் எதிராக ‘ரெட் கார்னர்’ அறிவிப்பு வெளியிட்டது. அதன் அடிப்படையில், துபாயில் இருந்த ரவி உப்பாலை கடந்த வாரம் உள்ளூர் போலீசார் கைது செய்தனர். 

இதைத்தொடர்ந்து, அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக நடவடிக்கைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் துபாய் காவல்துறையை தொடர்பு கொண்டுள்ளனர். இந்த செயலியின் மற்றொரு உரிமையாளரான சவுரப் சந்திரகரை தேடும் பணியிலும் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

“பாபாசாகேப் அம்பேத்கரே வலியுறுத்தினாலும் அது நடக்காது” - பிரதமர் மோடி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
PM Modi says Even if Babasaheb Ambedkar insists it will not happen

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

அந்த வகையில், மொத்தம் 11 மக்களவைத் தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில், முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இதையடுத்து, மீதமுள்ள தொகுதிகளுக்கு ஏப்ரல் 26 மற்றும் மே 7ஆம் தேதி என இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த மாநிலத்தில், காங்கிரஸ், பா.ஜ.க, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன. அதுமட்டுமல்லாமல், வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நோக்கத்துடன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலம், ஜஞ்கிர் பகுதியில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ் தலைவர்கள் தங்களை ராமர் என்று கருதி, ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்ய அழைப்பை மறுத்தனர். இது சத்தீஸ்கருக்கு அவமரியாதை இல்லையா? இது ராமரின் தாய்வழி வீடு.  காங்கிரஸ் திருப்திப்படுத்தும் அரசியல் செய்து கொண்டே இருக்கிறது, அது அவர்களின் டி.என்.ஏவில் உள்ளது.

திருப்திப்படுத்தும் அரசியலுக்காக பட்டியலினத்தவர்கள், ஏழைகள் மற்றும் பழங்குடிகளின் உரிமைகளைப் பறிக்க அவர்கள் தயங்க மாட்டார்கள். எங்கள் முன்னுரிமை ஏழைகள், இளைஞர்கள், பெண்கள். தேர்தல் நெருங்கும் போதெல்லாம், காங்கிரஸ் தலைவர்கள் பழைய வரிகளையே திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். பா.ஜ.க ஆட்சிக்கு வந்து அரசியல் சாசனத்தை முடிவுக்கு கொண்டு வந்து இட ஒதுக்கீட்டை ஒழிக்கும் என்று சொல்கிறார்கள். எவ்வளவு காலம் பொய் சொல்லிக்கொண்டே இருப்பீர்கள்?. 

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது. டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் வந்து அதை வலியுறுத்தினாலும் அது நடக்காது. மோடியின் தலையை உடைப்போம் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறுகிறார்கள். என் நாட்டின் தாய், சகோதரிகள் என்னுடன் இருக்கும் வரை மோடியை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. இந்தத் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள்” என்று கூறினார். 

Next Story

துபாயில் வரலாறு காணாத கனமழை; விமானங்கள் ரத்து!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 Heavy rain in Dubai Canceled flights

துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாகத் துபாயின் சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவிற்குக் கனமழை பொழிந்து வருகிறது. இதனால் துபாயின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வெள்ளம் தேங்கும் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மிதக்கின்றன. துபாயின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்திற்குக் கீழ் மற்றும் அதன் அருகே உள்ள வணிக வளாகங்களைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அதே சமயம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் விமானத்தை இயக்கவும் மற்றும் விமானங்களைத் தரையிறக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில் துபாய், ஷார்ஜா, குவைத் நகரங்களுக்கு சென்னையில் இருந்து செல்லும் 5 விமானங்களும், மறுமார்க்கத்தில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய 5 விமானங்களும் நேற்று (17.04.2024) ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் சென்னையில் இருந்து துபாய், குவைத் மற்றும் சார்ஜா செல்லும் 12 விமானங்கள் இரண்டாவது நாளாக இன்று (18.04.2024) ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.