Published on 05/05/2018 | Edited on 05/05/2018
கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வரும் 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் முதல்வர் வேட்பாளர்களாக காங்கிரஸ் சார்பாக சித்தராமையாவும், பா.ஜ.க சார்பாக எடியூரப்பாவும் களமிறங்கியுள்ளனர். இரு தேசிய கட்சிகளின் மூத்த தலைவர்களும், அமைச்சர்களும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில் பா.ஜ.கவின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இதில் அவர் கர்நாடக மக்களுக்கு அறிவித்த
திட்டங்கள்.
- கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைப்பெண்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் "முக்யா மந்திரி ஸ்மார்ட்போன் யோஜனா" திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.
- முதலமைச்சரின் விவசாய நிதியிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆயிரம் விவசாயிகள் விவசாயம் குறித்து புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்காக சீனா மற்றும் இஸ்ரேலுக்கு பயிற்சிக்கு அனுப்பப்படுவர்.
- தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகளில் உள்ள ஒரு லட்சம் வரையிலான விவசாய கடன் ரத்து செய்யப்படும்.
- இருபது லட்சம் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு தலா பத்தாயிரம் ருபாய் வழங்கப்படும்.
- உற்பத்தி பொருட்களின் விலை ஏற்ற, இறக்க காலங்களில் "ரைத்தா மார்க்கெட் " நிதியிலிருந்து ஐந்தாயிரம் கோடி ஒதுக்கப்படும்.
- விவசாயிகளின் குழந்தைகள் விவசாயம் மற்றும் மற்ற துறைகளில் படிப்பதற்கு நூறு கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
- மாநிலம் முழுவதும் பெண்களுக்கென்று கூட்டுறவு சங்ககங்கள் அமைத்து. அதில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விற்பனை செய்ய "ஸ்ட்ரீ யுனிட்டி" நிதியிலிருந்து பத்தாயிரம் கோடி ஒதுக்கப்படும்.
- இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இவ்வாறு எடியூரப்பா தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.