Skip to main content

டெல்லி அரசின் தூதரான சோனு சூட்!

Published on 27/08/2021 | Edited on 27/08/2021

 

sonu sood - arvind kejriwal

 

தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகர்  சோனு சூட். கரோனா ஊரடங்கு காலத்தில், புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு உதவி செய்தார். இதனால் இந்தியா முழுவதும் அவருக்கு பாராட்டு குவிந்தது. இந்தியாவின் பிரபலமான நபர்களில் ஒருவராக மாறினார்.

 

இந்தநிலையில் டெல்லி அரசு, சோனு சூட்டை மாணவர்களுக்கான திட்டம் ஒன்றின் தூதுவராக நியமித்துள்ளது. டெல்லி அரசு, தங்கள் தங்கள் மாநில அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வழிகாட்டுவதற்காக 'தேசத்திற்கு வழிகாட்டல்' (தேஷ் கே மெண்டார்) என்ற பெயரில் ஒரு திட்டத்தை செயல்படுத்தவுள்ளது.

 

இந்த திட்டத்தின் கீழ் சுமார் 3 லட்சம் இளம் தொழில்முறை வல்லுநர்கள், 10 லட்சம் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உட்பட பல்வேறு விஷயங்களில் வழிகாட்டுதல்களை வழங்கவுள்ளனர். இந்த திட்டத்தின் தூதுவராகவே சோனு சூட் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

 

இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலோடு கலந்து கொண்டு பேசிய சோனு சூட்,"லட்சக்கணக்கான மாணவர்களுக்கு வழிகாட்டும் வாய்ப்பு இன்று எனக்கு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வழிகாட்டுவதை விட பெரிய சேவை எதுவும் இல்லை" என தெரிவித்தார்.

 

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது, பஞ்சாப் தேர்தலையொட்டி ஆம் ஆத்மியில் இணையும் வாய்ப்பிருக்கிறதா என சோனு சூட்டிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "அரவிந்த் கெஜ்ரிவாலுடனான சந்திப்பில் அரசியல் எதுவும் விவாதிக்கப்படவில்லை. தற்போது வரை அரசியல் ரீதியாக நாங்கள் எதுவும் விவாதிக்கவில்லை" என தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் அடுத்தவருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 
 

சார்ந்த செய்திகள்