Skip to main content

சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை; சகோதரர்களுக்குத் தூக்கு தண்டனை விதித்த நீதிமன்றம்!

Published on 21/05/2024 | Edited on 21/05/2024
 The court sentenced the brothers to incident on girl

ராஜஸ்தான் மாநிலம், பில்வாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், வீட்டில் வளர்க்கப்படும் கால்நடைகளை மேய்ப்பதற்காக வெளியே சென்றார். காலை சென்ற சிறுமி மாலை வரை வீடு திரும்பாததால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் அவரை தேடித் தேடி வந்தனர். எங்குத் தேடியும் சிறுமி கிடைக்காததால், இந்தச் சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாகத் தேடி வந்தனர். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள நிலக்கரி உலையில் சிறுமியின் உடல் எரிந்து கொண்டிருந்ததை கண்டுபிடித்தனர். 

அதனைத் தொடர்ந்து, போலீசார் அந்தச் சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த காலு, கன்கா என்ற அண்ணன் தம்பி, சிறுமியைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் எரித்தது தெரியவந்தது. இதனையடுத்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிகளான அண்ணன் தம்பி மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு விசாரணை, நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், வழக்கின் விசாரணை அனைத்தும் முடிந்த நிலையில், கடந்த 18ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், காலு, கன்கா ஆகிய இருவரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு, இருவருக்கும் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் எரித்த சம்பவத்தில் சகோதரர்கள் இருவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்