Skip to main content

சீன ஏர்போர்ட்டை நொய்டா ஏர்போர்ட்டாக்கிய மத்திய அமைச்சர்கள் - விமர்சித்த சீன பத்திரிகையாளர்!

Published on 27/11/2021 | Edited on 27/11/2021

 

china

 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 25ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் ஜெவரில் நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்தநிலையில், மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், பிரஹலாத் சிங் படேல், அர்ஜுன் ராம் மேக்வால், உ.பி., துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா என பல்வேறு பாஜக தலைவர்கள் நொய்டா சர்வதேச விமான நிலையம் குறித்த தங்களது செய்தியில் விமான நிலையத்தின் மாதிரியைப் பதிவிட்டிருந்தனர்.

 

மேலும், சில மத்திய அரசின் அதிகாரபூர்வ பக்கங்களிலும் அந்தப் புகைப்படம், நொய்டா விமான நிலையத்தின் மாதிரி என வெளியானது. இந்தநிலையில், பாஜக தலைவர்கள் பதிவிட்ட மாதிரி புகைப்படம், சீனாவில் உள்ள விமான நிலையத்தின் புகைப்படம் என தெரியவந்தது. இது சர்ச்சையான நிலையில், சீன விமான நிலையத்தை நொய்டாவில் அமையவுள்ள விமான நிலையம் என பதிவிட்டதை சீன அரசு ஊடகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் விமர்சித்துள்ளார்.

 

இதுதொடர்பாக சீன பத்திரிகையாளர் ஷென் ஷிவேய், தனது ட்விட்டர் பக்கத்தில், "சீன பெய்ஜிங் டாக்சிங் சர்வதேச விமான நிலையத்தின் புகைப்படங்களை, இந்திய அரசு அதிகாரிகள் தங்கள் உள்கட்டமைப்பின் சாதனைகளுக்குச் சான்றாகப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன்" என கூறியுள்ளார்.

 

 

மேலும், சீன விமான நிலையத்தின் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ள அவர், "சீனாவின் பெய்ஜிங் டாக்சிங் சர்வதேச விமான நிலையத்திற்கு வரவேற்கிறோம். இது 17.47 பில்லியன் அமெரிக்க டாலர் செலவிலான ஒரு மெகா திட்டம்" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்