வாடிக்கையாளர்கள் இனிமேல் ஏடிஎம் கார்டுகள் இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய வசதியை நாடுமுழுவதும் அமைக்கவுள்ளதாக எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.
வங்கியில் நேரில் சென்று மட்டுமே பணம் எடுக்க முடியும் என்ற நிலை இருந்தபோது, வங்கிகளில் கூட்டத்தை குறைக்கவும், வங்கிகளுக்கு வராமல் எளிமையான முறையில் பணம் எடுக்கவும் கொண்டுவரப்பட்டதே ஏ.டி.எம் கார்டுகள். இந்த நிலையில் தற்போது இதனை மேலும் எளிமையாக்கும் வகையில், இனி ஏ.டி.எம் கார்டுகள் இல்லாமலே ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்கும் புதிய முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ஏற்கனவே கடந்த மார்ச் 15-ம் தேதி முதல் நாட்டின் ஒரு சில இடங்களில் உள்ள ஏ.டி.எம் மையங்களில் இந்த முறை சோதனை முயற்சியாக அமல்படுத்தப்பட்டு வெற்றி பெற்றுள்ளது. எனவே தற்போது இதனை நாடு முழுவதும் அமல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி யோனோ மொபைல் ஆப்பை பயன்படுத்தி நாடு முழுவதும் இனி ஏ.டி.எம் மையங்களில் கார்ட் இல்லாமல் பணமெடுக்கும் முறை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக எஸ்பிஐ வங்கியின் தலைவர் ரஜினிஷ் குமார் கூறியுள்ளார்.
இந்த செயலி மூலம் 6 இலக்க ரகசிய எண்ணை உருவாக்கி வாடிக்கையாளர்கள் இந்த மையங்களில் பணத்தை எடுக்க வசதி வழங்கப்படும். ‘யோனோ மொபைல் ஆப்ஸ்’ மூலம் வாடிக்கையாளர்கள் ஒரே பரிவர்த்தனை மூலம் ரூ.10000 வரையிலும் எடுக்க முடியும். நாள் ஒன்றுக்கு 2 முறை மட்டுமே இந்த மொபைல் ஆப்ஸை பயன்படுத்தி பணம் எடுக்க முடியும். நாடு முழுவதும் தற்போது 68,000 யோனோ கேஷ் பாயிண்டுகள் உள்ள நிலையில் அடுத்த 18 மாதங்களில் இதனை 10 லட்சமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.