மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லியைச் சுற்றியுள்ள எல்லைப்பகுதிகளில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதேபோல், டெல்லி - ஹரியானா எல்லையான சிங்கு எல்லையிலும் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் சிங்கு எல்லைப்பகுதியில் அமைந்துள்ள ஹரியானாவின் குண்ட்லியில் ஒருவர் கொலை செய்யப்பட்டு, கவிழ்த்துபோடப்பட்ட காவல்துறை பேரிக்காடில் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளார். அவரது மணிக்கட்டு துண்டிக்கப்பட்டிருந்தது. சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாஹிப்பை அவமதித்ததற்காக கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அதேசமயம், மணிக்கட்டு துண்டிக்கப்பட்டு தரையில் கிடக்கும் நபரைச் சுற்றி நிஹாங்ஸ் எனப்படும் ஆயுதம் ஏந்திய சீக்கிய பிரிவினர் நிற்பது போன்ற வீடியோ ஒன்று பரவிவருகிறது. நிஹாங்ஸ் சீக்கியர்கள் இந்தக் கொலையை செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அவசரக் கூட்டத்தைக் கூட்டிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துவரும் 40 வேளாண் அமைப்புகளின் ஒட்டுமொத்த கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா, இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பல்பீர் சிங் ராஜேவால், தர்ஷன் பால், குர்னம் சிங் சாருனி, ஹன்னன் மொல்லா, ஜக்ஜித் சிங் டல்லேவால், ஜோகிந்தர் சிங் உக்ரஹான், ஷிவ்குமார் சர்மா கக்காஜி, யுத்வீர் சிங் மற்றும் யோகேந்திர யாதவ் ஆகிய விவசாய சங்கத் தலைவர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், "இறந்த நபர், சர்பலோ கிராண்ட்டை (சீக்கிய மதப் புத்தகம்) அவமதிக்க முயன்றதால், இந்த சம்பவம் நடந்ததாக கூறி, சம்பவ இடத்தில் இருந்த நிஹாங்ஸ் குழு சம்பவத்திற்கான (கொலைக்கான) பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளது. மோர்ச்சா, எந்தவொரு மத உரையையும் அல்லது சின்னத்தையும் அவமதிப்பதற்கு எதிரானது. ஆனால் அது சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்கும் உரிமையை யாருக்கும் கொடுக்காது" என கூறப்பட்டுள்ளது.
மேலும், இறந்த நபர் மற்றும் நிஹாங்ஸ் குழு ஆகிய இருதரப்புக்கும், சம்யுக்தா கிசான் மோர்ச்சாவுடன் எந்த தொடர்பும் இல்லை என தனது அறிக்கையில் கூறியுள்ள சம்யுக்தா கிசான் மோர்ச்சா, இந்தக் கொடூரமான கொலையைக் கண்டிப்பதாகவும் கூறியுள்ளது.
கொலை மற்றும் அவமதிப்பிற்குப் பின்னால் உள்ள சதி குற்றச்சாட்டை விசாரித்த பிறகு, குற்றவாளிகளுக்கு சட்டப்படி தண்டனை வழங்க வேண்டும் என கோருவதாக தனது அறிக்கையில் கூறியுள்ள சம்யுக்தா கிசான் மோர்ச்சா, காவல்துறை மற்றும் அரசு நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் எனவும் தெரிவித்துள்ளது.