இஸ்லாமிய பெண் மருத்துவர் ஒருவர் இந்து மதத்திற்கு மாறியதால் தனக்கு மிரட்டல் வருவதாக வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அஸ்ஸாம் மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக பணியாற்றி வருகிறார் அலிமா அக்தர். இஸ்லாம் மதத்தை சேர்ந்த இவர் இந்து மதத்திற்கு மாறியுள்ளார். இதற்கு, இவரின் குடும்பத்தினரிடம் இருந்து அச்சுறுத்தல் வருவதாக அவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில், “நான் டாக்டர். அலிமா அக்தர், திப்ருகாரில் உள்ள அசாம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் மருத்துவர். நான் இந்து மதத்திற்கு மாறிவிட்டேன். இஸ்லாமிய மத குருவை திருமணம் செய்து கொள்ளும்படி குடும்பத்தினர் வற்புறுத்துகிறார்கள். மேலும், இஸ்லாத்திற்கு மாறி மதகுருவை திருமணம் செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், கொலை செய்து விடுவதாக குடும்பத்தினர் மற்றும் ஜமாத்தை சேர்ந்தவர்கள் அச்சுறுத்துகிறார்கள்” என கூறினார். தொடர்ந்து அவர், “நான் தற்போது விமான நிலையத்தில் பாதுகாப்பாக இருக்கிறேன். செக்யுரிட்டிகள் இங்கு இருக்கின்றனர். ஆனால் எனக்கு பிரச்சனையே குடும்பத்தினரிடம் இருந்துதான் வருகிறது” எனவும் கூறியிருந்தார்.
இந்த வீடியோவை ட்விட்டரில் ஷேர் செய்த அஸ்ஸாம் முதல்வர், “முறையான விசாரணைக்குப் பிறகு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மாநில டி.ஜி.பி ஜிபி சிங்கை கேட்டுக்கொண்டுள்ளார். இருப்பினும், அலிமாவின் குடும்ப உறுப்பினர் ஒருவர், உறவினர்களால் அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். அந்தப் பெண்ணின் விருப்பப்படி தனது வாழ்க்கையை நடத்துவதில் தங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.