Skip to main content

"அனைவரும் ஹோட்டலில் தங்குங்கள்" - காங்கிரஸ் எம்.எல்.ஏ. க்களுக்கு முதல்வர் அசோக் கெலாட் உத்தரவு...

Published on 30/07/2020 | Edited on 30/07/2020

 

ashok gehlot orders mla to stay in resort

 

 

ஆகஸ்ட் 14 ஆம் தேதி சட்டசபை கூடும் வரை காங்கிரஸ் எம்.எல்.ஏ. க்கள் அனைவரும் தற்போது தங்கியுள்ள சொகுசு விடுதியிலேயே தங்கியிருக்க வேண்டும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

ராஜஸ்தானில் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து அசோக் கெலாட் ஆட்சிக்கு எதிராக செயல்பட்டு வருவதால், அம்மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளாத சச்சின் பைலட்டை யாரும் எதிர்பாராத விதமாக கட்சியிலிருந்தும், துணை முதல்வர் பதவியிலிருந்தும் காங்கிரஸ் கட்சி நீக்கியது. இந்நிலையில் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 19 பேரைத் தகுதி நீக்கம் செய்ய, சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சச்சின் பைலட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் 19 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க தடை விதித்துள்ளது.

 

இந்நிலையில், ராஜஸ்தான் சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முயன்று வருகிறார் அசோக் கெலாட். இதற்காக ஆளுநரிடம் அனுமதி கோரி மூன்று முறை கடிதம் கொடுத்த நிலையில், அதனை ஆளுநர் திருப்பி அனுப்பினார். இதனையடுத்து அசோக் கெலாட், பிரதமர் மோடியின் உதவியை நாடிய பிறகு, அவையை கூட்ட ஒப்புக்கொண்டார், அம்மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா. மேலும், கூட்டத்தொடரில் பங்கேற்க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 21 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த சூழலில், ஆகஸ்ட் 14 அன்று சட்டசபையைக் கூட்ட ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா ஒப்புதல் அளித்துள்ளார். இந்நிலையில், ஆகஸ்ட் 14 ஆம் தேதி சட்டசபை கூடும் வரை காங்கிரஸ் எம்.எல்.ஏ. க்கள் அனைவரும் தற்போது தங்கியுள்ள ஹோட்டல் ஃபேர்மாண்டிலேயே தங்கியிருக்குமாறு அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்